உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ஒரு தமிழன் என்றால் அது நம்முடைய ஏ ஆர் ரஹ்மான்தான். ஏ ஆர் ரஹ்மான் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் மற்றும் திரைத்துறையில் சாதித்த வெற்றிகளைப் பற்றி பார்ப்போம்.
ஏ. ஆர். ரகுமான்
“இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு, இவர் இசையமைத்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற இந்தி திரைப்படத்திற்காக, இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்திய திரைப்பட இசைத்துறையில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் வாழ்க்கை வரலாற்றையும் சாதனைகளையும் பற்றி விரிவாக காண்போம்.
பிறப்பு
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில், 1966 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் திலீப்குமார் ஆகும். இவருடைய தந்தை பெயர் சேகர். மலையாள இசைத் துறையில் பணியாற்றி வந்தார்.
ஆரம்ப வாழ்க்கை
ஏ.ஆர். ரகுமான், தன் இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால், தன்னுடைய குடும்ப சூழ்நிலைக் காரணமாக தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதன் வருவாயில் இசை கற்க ஆரம்பித்தார். அவருடைய தந்தை இறந்தபோது, அவருக்கு வயது ஒன்பது. ஒருமுறை இவருடைய சகோதரி நோயால் அவதியுற்ற போது, ஒரு முஸ்லீம் நண்பனின் ஆலோசனையின் பேரில் மசூதிக்கு சென்று பிரார்த்தனை செய்ததன் விளைவாக இவருடைய சகோதரி முற்றிலும் நோயிலிருந்து விடுபெற்றார். இதனால் இவருடைய குடும்பம் இஸ்லாமிய மதத்திற்கு மாறியது. திலீப்குமார் என்ற பெயரை ஏ.ஆர். ரகுமான் என்று மாற்றிக் கொண்டார்.
இசை பயணம்
ஏ.ஆர். ரகுமான், தன்னுடைய பதினொரு வயதில், இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர், எம்.எஸ். விஸ்வநாதன், ரமேஸ் நாயுடு, மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் போன்ற இசை கலைஞர்களிடமும் பணியாற்றினார். இசைத்துறையில் ஏற்பட்ட ஆவலினால் “ட்ரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக் கல்லூரியில்” கிளாசிக்கல் இசைத்துறையில் இசை பயின்று பட்டமும் பெற்றார். 1992 ஆம் ஆண்டு, மணிரத்தினம் இயக்கத்தில் “ரோஜா” திரைப்படம் மூலம் இசைதுறையில் அறிமுகமானார் ஏ.ஆர். ரகுமான். தன்னுடைய முதல் படத்திலேயே முத்திரைப் பதித்தார். இந்த படம் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை தந்தது என்றால் அது மிகையாகாது. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் பிரபலமானது மட்டுமல்லாமல், முதல் படமே இவருக்கு தேசியவிருதையும் வாங்கித்தந்தது. ரகுமானை தமிழர்கள் மட்டுமல்ல மொத்த இந்தியாவும் ‘யார் இந்த இளைஞன்?’ என்று கேட்க வைத்தது. பின்னர், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைபடங்களுக்கும் இசையமைத்த இவர் “இசைப்புயல்” எனவும் அழைக்கப்பட்டார்.
சாதனைகள்
1997 ஆம் ஆண்டு, ‘மின்சாரக் கண்ணா’ என்ற திரைப்படத்திற்கும், 2002 ஆம் ஆண்டு இசையமைத்து வெளிவந்த ‘லகான்’ திரைப்படத்திற்கும், 2003 ஆம் ஆண்டு ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்திற்கும், தேசியவிருதுகள் கிடைத்தது. ‘ரோஜா’ திரைப்படத்திற்கு இசையமைத்தற்காக “தேசியவிருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும், ஜென்டில்மேன் படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும், “காதலன்” படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும், “மின்சார கனவு” படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. ஏ.ஆர். ரகுமான் தன்னுடைய இசையால் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் ஹாலிவுட்டிலும் வெற்றிக் கொடி நட்டுள்ளார்.
ஆஸ்கார் விருதுபெற்ற “ஸ்லம் டாக் மில்லியனியர்”
2008 ஆம் ஆண்டு, இசையமைத்து வெளிவந்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற திரைப்படம் இவருக்கு திரைப்படத்துறையில் மிகப்பெரிய விருதான “ஆஸ்கார் விருதை” 2009 ஆம் ஆண்டு பெற்றுத் தந்தது. படத்தின் ‘சவுண்ட் ட்ராக்’ மற்றும் “ஜெய் ஹோ” பாடல் ஆகியவற்றிற்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன. ஆஸ்கார் விருதை பெற்றுக்கொண்டு “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என தமிழில் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, தமிழ் கூறும் நல்லுலகம் அவரை உச்சி முகர்ந்து மெச்சி மகிழ்ந்தது. இரண்டு ஆஸ்கார் விருதை பெற்று, இந்தியாவின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றார். அதுமட்டுமல்லாமல், 2008-க்கான “கோல்டன் குளோப்” விருதும், “பாபடா” விருதும் இத்திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது. இவ்விருது பெற்ற முதல் இந்தியரும் இவரே.
ஆல்பம்
ஏ.ஆர். ரகுமான் திரைப்படங்கள் மட்டுமல்லாமல், ஆல்பங்களும் வெளியிட்டு வந்தார். 1989 ஆம் ஆண்டு, “தீன் இசை மாலை” என்ற தன்னுடைய முதல் ஆல்பத்தை வெளியிட்டார். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த “வந்தே மாதரம்” இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. ரசிகர்கள் மனதில் அவருக்கு தனி இடத்தையும் பெற்றுத்தந்தது. இதுவரை இந்தியாவில் வெளியான சினிமா அல்லாத ஆல்பத்தில் அதிக விற்பனை ஆனது என்று இசை உலகில் கூறப்படுகிறது. பின்னர், இந்தியா, ஹாங்காங், அமெரிக்கா, ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட “இன்ஃபினிட் லவ்” என்ற ஆல்பம் உலகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ளது. ‘ஜன கன மன’, ‘இக்னைட்டட் மைன்ட்ஸ்’, ‘மா தூஜே சலாம்’ (அம்மாவுக்கு வணக்கம் – தமிழில்) மற்றும் மேலும் பல ஆல்பங்களையும் படைத்துள்ளார்.
பிற விருதுகள்
இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூசன்” வழங்கப்பட்டது.
இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது.
பத்மஸ்ரீ விருது
லாரன்ஸ் ஆலிவர் விருது
தமிழக திரைப்பட விருது
மலேசிய விருது
ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது.
கோல்டன் குளோப் விருது
கிராமிய விருது
இசையால், உலகத் திரையுலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர், ஏ.ஆர். ரகுமான். அவர் இசையில் மயங்காதார் எவரும் இல்லை. இதனால் உலகம் முழுக்க தனகென்று ரசிகர்களை கொண்டுள்ளார். அவருடைய இசைக்கு இன்றைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மயங்கிக் கிடக்கிறார்கள்.
இன்று ஒட்டு மொத்த இந்தியாவிலும் அதிக தேசிய விருதைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர், இந்த இசை புயல் மட்டுமே.
“உலகத்தரத்தில் ஒரு இந்திய இசையமைப்பாளர் என்றால் அது மிகையாகாது.”