சமீபகாலமாக தமிழில் வெற்றி பெற்ற படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது. மற்ற மொழிப் படங்களை தமிழில் ரீமேக் செய்யும் காலம் மாறி தற்போது தமிழ் படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்து வருகின்றனர். இது தமிழ் படங்களுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சூரரைப்போற்று படம் ஹிந்தியில் ரீமேக் உள்ளது. இது மட்டுமின்றி கைதி, மாநகரம், விக்ரம்வேதா, கோலமாவு கோகிலா, மாஸ்டர் உள்ளிட்ட 12 தமிழ் படங்கள் ஒரே சமயத்தில் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளன.
தற்போது இந்த வரிசையில் நடிகர் அருண் விஜய் படமும் இணைய உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான படம் தடம். இப்படத்தில், அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். இவருடன், தான்யா ஹோப் மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆக்ஷன் த்ரில்லர் படமாக வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஏற்கனவே இப்படம் தெலுங்கில் ரெட் என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்படுகிறது. ராம் பொத்தினேனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தடம் படத்தின் ஹிந்தி ரீமேக் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரபல ஹீரோ ஆதித்யா ராய் கபூர், அருண் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
பூஷண் குமாரின் டி சீரிஸ் பிலிம்ஸ் மற்றும் முராத் கெதானியின் சினி 1 ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை வர்தன் கேத்கர் இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.