தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. பல படங்களில் நடித்துள்ள ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. படத்தில் ஆர்யாவின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆர்யா மீது பணமோசடி புகார் ஒன்று பதிவாகியுள்ளது.
நடிகர் ஆர்யா கஜினிகாந்த் படத்தில் நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஜெர்மனியைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண் சிபிசிஐடி போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார்.
ஆனால் அந்தப் புகார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யாத நிலையில், அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி விட்ஜா சார்பில் வழக்கறிஞர் ராஜபாண்டியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், “நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது எனது கடனை செலுத்தி விடுவதாக ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷாவின் பெற்றோர் உறுதியளித்தனர். மேலும் ஆர்யாவும் 6 மாதத்தில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு என்னை திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதியளித்தார்.
இதனால்தான் நடிகை சாயிஷாவை ஆர்யா திருமணம் செய்துகொள்ள நான் சம்மதித்தேன். ஆனால் ஆர்யா என்னை திட்டம்போட்டு ஏமாற்றிவிட்டார்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி நடிகர் ஆர்யாவுக்கு எதிராக மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் தற்போதைய நிலை குறித்து சிபிசிஐடி போலீஸார் வரும் 17ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். எனவே நடிகர் ஆர்யா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். இது தொடர்பாக ஆர்யா அளித்த பதிலை வீடியோவாகவும், எழுத்து பூர்வமாகவும் போலீஸார் பெற்று கொண்டனர்.