67வது தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்ட பல தமிழ் நடிகர்கள் தேசிய விருதை பெற்று சென்றனர். மேலும் இதே மேடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான தமிழ் நடிகர்கள் தேசிய விருது பெற்றது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், மற்றொரு புறம் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். காரணம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்க்கு இந்த முறை விருது கிடைக்கவில்லை என்பது தான். இந்த ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது விசுவாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக இசையமைப்பாளர் இமானுக்கு வழங்கப்பட்டது.
இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான அசுரன் படம் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய விருதை தட்டி சென்றது. ஆனால் இந்த படத்திற்கு மிக சிறப்பாக இசையைமைத்து கொடுத்த ஜிவி பிரகாஷ்க்கு விருது கிடைக்கவில்லையே என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஒரு திறமையான இசையமைப்பாளர் என்றால் அதில் ஜிவியும் அடங்குவார். வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி தொடர்ந்து பல படங்களில் தரமான பாடல்களுக்கு இசையமைத்திருப்பதோடு, பாடியும் உள்ளார். அவ்வளவு ஏன் இதே இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான ஆடுகளம் படத்திற்கும் ஜிவி தான் இசையமைத்து இருந்தார்.
ஆடுகளம் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் ஆடுகளம் படமும் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அசுரன் படமும் தேசிய விருதை வென்றுள்ளது. ஆனால் இந்த இரண்டு படங்களிலும் சிறப்பான இசையை வெளிப்படுத்திய ஜிவிக்கு விருது கிடைக்காதது வருத்தம் அளிப்பதாக ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கூறி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் திறமைகள் மறுக்கப்பட்டு தான் வருகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்பது போன்று சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.