திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஐயப்ப பாடல் சர்ச்சை.. இசைவாணி மீது புகார், போட்டிக்கு பாடல் வெளியிட்டு அசிங்கப்படுத்திய பக்தர்கள்

கானா பாடகி இசைவாணி பாடிய ஐயம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா என்ற பாடல் சர்ச்சையாகியுள்ள நிலையில், இப்பாடலுக்குப் போட்டியாக ஐம் எம் சாரி சொரியானே என்ற பாடல் வெளியாகியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் நீலம் அமைப்பை சேர்ந்த கானா பாடகி இசைவாணி ஐ எம் சாரி ஐயப்பா என்ற பாடலை உருவாக்கியதாகக் கூறப்பட்டது.

இப்பாடல் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இப்பாடல் ஐயப்பனுக்கு எதிரான பாடல், இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளது எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இப்பாடலை பா.ரஞ்சித்தின் காஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ் அமைப்பு உருவாக்கிய நிலையில், ஐயப்பான் பாடல் சர்ச்சை பற்றி, நீலம் அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “ஐயம் சாரி ஐயப்பா, பாடல் ஆண்டாண்டு காலமாக இங்கு பேசப்பட்டு வரும் கோவில் நுழைவு உரிமையைக் கோருகின்ற வரிகளோடு தொடங்கி, பெண்களின் உரிமைகளைப் பறிக்கும் பொதுவான உரிமைகளைக் கோருகிற பாடலாக அமையப் பெற்றது.

இப்பாடலைப் பாடியது இசைவாணி, எழுதி இசையமைத்தது. தி காஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ் என்றும், அடிப்படை உரிமையைக் காப்போம் இசைக்கலைஞர் இசைவாணியுடன் துணை நிற்போம்” என்று தெரிவித்திருந்தது.

இப்பாடலுக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகளும், பிரபலங்களும் எதிர்ப்பு கூறி வருகின்றனர். இதுகுறித்து, இயக்குனர் மோகன் ஜி இசைவாணியை கைது செய்ய வேண்டும் என பதிவு செய்திருந்தார். பாஜக மூத்த தலைவர் தமிழிசை, இசைவாணி, ஐயப்பன் மீது அவதூறாக பாடல் பாடி அதை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அவருக்கு எனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்துக்கள் மதத்தை புண்படுத்தும் விதமாக பிற மதங்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி ஒசூர் காவல் நிலையத்தில் சிவசேனா அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், அப்பாடலுக்குப் போட்டியாக ஐஎம் சாரி சொரியானே என்ற பாடலை ஐயப்ப பக்தர்கள் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்பாடலை பாடியவர், இசை அமைத்தவர்கள் யார் என்பது தெரியவில்லை.

Trending News