இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளிவந்து உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு பிரம்மாண்ட படம்தான் பாகுபலி. இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படம் வசூலை மட்டுமல்லாமல் பல விருதுகளையும் வாரி குவித்தது.
தற்போது பாகுபலி கதை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெப் தொடராக தயாராக உள்ளது. பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் ராஜமாதா சிவகாமிதேவி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரத்தின் இளம் வயது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த வெப் தொடர் உருவாக உள்ளது.
மேலும், பாகுபலி பட காட்சிகளுக்கு முந்தைய சம்பவங்கள் இந்த தொடரில் இடம்பெற உள்ளன. சுமார் 9 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடர், ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தொடரில் இளம் வயது சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகை சமந்தாவை அணுகி உள்ளனர். அவர் நடிக்க மறுத்துவிட்டதால், தற்போது இளம் நடிகை வாமிகா கபியை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா இணைந்து நடித்து வரும் ’ஆர்.ஆர்.ஆர்.’ என்ற படத்தை இயக்கி வரும் ராஜமவுலி, இப்படத்தை முடித்த பின்னர் பாகுபலி வெப் தொடரை இயக்க திட்டமிட்டு உள்ளதாகவும், அவரே இதை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.