பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் விளையாடவுள்ளது. ஏற்கனவே மூன்று 20 ஓவர் போட்டிகள் முடிந்த நிலையில் பாகிஸ்தான் அணி 3-0 என்று வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது 20 ஓவர் போட்டி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. அதிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வளர்ந்துவரும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் அப்ரிடி செய்த செயல் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி வீரர் அபிப் ஹூசைன் மீது வேண்டுமென்றே பந்தை வீசி அவரை நிலைகுலையச் செய்தார் ஷகீன் அப்ரிடி. ஆட்டத்தின் போது அப்ரிடி வீசிய பந்தை சிக்சருக்கு விளாசினார் ஹூசைன். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அப்ரிடி, அடுத்த பந்து அவரை நோக்கி வந்ததும் அதனைப் பிடித்து ஸ்டம்பில் எறிவதாக அபிப் ஹூசைன் காலில் வேகமாக வீசினார். இதனை எதிர்பாராத ஹூசைன் பந்து பட்ட வேகத்தில் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.
இதனால் நடுவர்கள் ஷகீன் அப்ரிடி, வேண்டுமென்றே பந்தை காலில் எறிந்து காயத்தை ஏற்படுத்தியதாக கருதி அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதித்தனர். அப்ரிடி செய்த இந்த தவறை சுட்டிக்காட்டி முன்னாள் வீரர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.