சமீபகாலமாக பெரும்பாலானோர் வங்கிக்கு செல்வதையே நிறுத்தி விட்டார்கள். காரணம் தங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலமாகவே மொபைல் போன் ரீசார்ஜ் முதல் டிக்கெட் புக்கிங் வரை அனைத்துமே கூகுள் பே, ஃபோன் பே, பேட்டி எம் போன்ற நம்பகதகுந்த செயலிகள் மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்கிறார்கள். இது மக்களுக்கு எளிதாகவும் இருக்கிறது.
இதுபோன்ற செயலிகள் தங்கள் வங்கி கணக்குகளில் இணைத்திருக்கும் மொபைல் நம்பரின் மூலம் பரிவர்த்தனை நடக்கிறது. நாம் பல வகை திருட்டுக்களை பார்த்திருப்போம். ஆனால் சிம் ஸ்வாப் என்ற நூதன முறையை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து இலட்சக்கணக்கான பணம் திருடப்படுகிறது.
நம்முடைய சிம்கார்டு சில சமயங்களில் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. அந்த சிம்கார்டு எண்ணில் நம்முடைய வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டிருந்தால் அதை வேறு ஒருவர் நம்முடைய நம்பரில் புதிய சிம் கார்டு வாங்கி பணப்பரிவர்த்தனை செயலியை பயன்படுத்தினால் நமது பணம் திருடு போக வாய்ப்புள்ளது. இதுபோன்ற திருட்டை சிம் ஸ்வாப் என்று கூறப்படுகிறது.
இந்த சிம் ஸ்வாப் திருட்டு தமிழகத்தில் முதல்முறையாக சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை கண் மருத்துவமனையில் அரங்கேறி உள்ளது. மருத்துவமனையின் வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டிருந்த மொபைல் எண்ணின் சேவை துண்டிக்கப்பட்டு அதே எண்ணில் புதிய சிம்கார்டை பெற்று அந்த மருத்துவமனையின் வங்கி கணக்கில் இருந்து 24 லட்சம் திருடப்பட்டுள்ளது.
இதில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகள் உள்ளது. நம்முடைய மொபைல் போனில் நெட்வொர்க் நிலைகுறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமது அலைபேசிக்கு நீண்ட நேரமாக எந்த அழைப்பும் அல்லது எந்த குறுஞ்செய்தியும் வராமல் இருந்தால் ஏதோ தப்பு நடந்துள்ளது.
அத்தகைய சூழ்நிலையில் நாம் மோசடிக்கு ஆளாகவில்லை என்பதை உறுதிப்படுத்த மொபைல் ஆபரேட்டரை தொடர்பு கொண்டு விசாரிக்க வேண்டும். நம்முடைய ஜிமெயில் அக்கவுண்ட்டை வேறு ஒருவர் பயன்படுத்தினால் நமக்கு அலர்ட் மெசேஜ் வரும். அதேபோல் சில மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிம் ஸ்வாப் பற்றி எச்சரிக்க எஸ்எம்எஸ் அனுப்புகிறார்கள்.
இல்லையென்றால், வங்கி கணக்கில் மாற்றங்கள் நடந்தால் உங்களுக்கு அலர்ட் மெசேஜ் வரும் வகையில் வங்கியை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். இந்த இரண்டு முறைகளையும் பயன்படுத்தி நமது பணத்தை இழக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.