நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
விஜய் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. விஜய் நடிக்கும் 65வது படமான இப்படத்திற்கு கடந்த மாதம் தான் பீஸ்ட் என பெயர் வைக்கப்பட்டது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே படத்தின் தலைப்பை பலரும் விமர்சனம் செய்து வந்தனர். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக தமிழில் தலைப்பு வைக்குமாறு அஜித் ரசிகர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் தற்போது பீஸ்ட் என்ற தலைப்பை மாற்றி விடலாமா? என்ற ஆலோசனையில் படக்குழு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் விமர்சனங்கள் எழுந்தது மட்டும் கிடையாது. தமிழக அரசு விரைவில், தமிழ் திரைப்படங்களுக்கான 8 சதவீத வரியை தள்ளுபடி செய்ய உள்ளதாம்.
அதாவது தமிழில் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு மட்டுமே இந்த வரிச்சலுகை வழங்கப்படும் என்ற நிபந்தனை வைக்கப்பட்டுள்ளது. எனவே படத்தின் தலைப்பை தமிழில் மாற்றிவிடலாமா? என படக்குழு யோசித்து வருகிறார்கள்.

படக்குழுவின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பீஸ்ட் என்ற தலைப்பில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி உள்ள நிலையில் தற்போது தலைப்பு மாற்றப்படுவதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி வருகின்றனர். இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளிவரவில்லை.