தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் மணிரத்தினம். இவரது படங்கள் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது மணிரத்தினம் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்து வருகிறார். பிரமாண்டமாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இயக்குனர் மணிரத்னம் மீது பீட்டா இந்தியா அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. பொன்னியின் செல்வன் படம் சரித்திர கதை என்பதால் இப்படத்தில் குதிரை, யானை உள்ளிட்ட விலங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் குதிரை ஒன்று இறந்துள்ளது.
இதனால் பீட்டா இந்தியா அமைப்பு மணிரத்னம் மீது ஹைதராபாத்தில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் இதுகுறித்து தெலங்கானா மாநில விலங்குகள் நலவாரியம், ஹைதராபாத் மாவட்ட கலெக்டர் ஆகியோர் விசாரிக்க வேண்டும் எனவும் இந்திய விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர அந்த விபத்து குறித்த வீடியோ அல்லது புகைப்படங்களை யாரேனும் அளித்தால் அவர்களுக்கு 25000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் பீட்டா இந்தியா அறிவித்துள்ளது. மேலும் தற்போது உள்ள நவீன டெக்னாலஜியில் பட ஷூட்டிங்கில் நிஜ விலங்குகளை பயன்படுத்தாமல், கிராபிக்ஸ் மூலம் விலங்குகளை பயன்படுத்த வேண்டும் என பீட்டா இந்தியா கோரியுள்ளது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனரான மணிரத்னத்திற்கு எதிராக பீட்டா இந்தியா அளித்துள்ள இந்தப் புகார் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏதேனும் பிரச்சனை எழுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.