தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் பாக்கியராஜ். பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்திலிருந்து அவருக்கு உதவி இயக்குநராக திரை வாழ்க்கையை தொடங்கியவர் பாக்யராஜ்.
பாரதிராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் படத்தில் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் நடித்திருந்தார். பிறகு பாரதிராஜாவின் மூன்றாவது படமான சிகப்பு ரோஜாக்கள் படத்தில் பாக்கியராஜ் வசனம் எழுதியிருந்தார். இப்படம் 20 நாளிலேயே எடுத்து முடிக்கப்பட்டது.
சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல், ஸ்ரீதேவி, கவுண்டமணி ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் இரண்டு காட்சிகளில் நினைவில் நிற்கும்படியான, உணவு விடுதிப் பணியாளர் வேடம் ஏற்று பாக்யராஜ் நடித்தார். பாரதிராஜா எப்போதும் பாக்யராஜை, ராஜன் என்றுதான் அழைப்பாராம். ஒரு நாள் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் ஷூட்டிங்கின்போது பாக்யராஜ் ஊருக்கு போய்விட்டாராம்.
பாக்யராஜ் திரும்ப வரும் பொழுது ராமு என்ற புது ஆள் வேலைக்கு வந்து விட்டாராம். சூட்டிங்கில் பாரதிராஜா, ராமு, ராமு என்று புதிய உதவியாளரை அழைத்து விட்டாராம். இதனால் மனம் உடைந்துபோன பாக்கியராஜ் கோபித்துக்கொண்டு லெட்டர் எழுதி வைத்துவிட்டு கிளம்பிவிட்டாராம்.
அதன்பிறகு, பாரதிராஜா பாக்யராஜை சமாதானப்படுத்தினாராம். பாரதிராஜாவின் அடுத்த படமான புதிய வார்ப்புகள் படத்தில் வசனகர்த்தாவாக மட்டுமன்றி, கதாநாயகனாகவும் பாக்யராஜை அறிமுகம் செய்தார்.
அதன்பிறகு, பாக்யராஜ் அந்த ஏழு நாட்கள், தூரல்நின்னுபோச்சி, முந்தானை முடிச்சு என பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். பாரதிராஜா போலவே பாக்யராஜும், பாண்டியராஜ், பார்த்திபன், வி சேகர், லிவிங்ஸ்டன் போன்ற பல இயக்குனர்களை உருவாக்கியுள்ளார்.