தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு என்று இரண்டிலும் கலக்கி வருபவர் நடிகர் பாக்யராஜ். தற்போது அவர் மகன் சாந்தனுவுடன் இணைந்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதையடுத்து வித்தியாசமான முயற்சியில் உருவாகி வரும் 3.6.9 என்ற திரைப்படத்தில் பாக்யராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வெறும் 81 நிமிடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இது உலக சாதனை வரலாற்றுக்காக எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
இப்படத்தில் பாக்யராஜுடன் இணைந்து பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சக்தி மகேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் கிருமாம்பாக்கம் பிள்ளையார் குப்பத்தில் நடைபெற்றது. நேற்று 11:40 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு 1.01 மணிக்கு நடத்தி முடிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 24 கேமராக்கள், 150க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள், 450 பணியாளர்களை கொண்டு இந்த சாதனை உருவாக்கப்பட்டது.
மேலும் நாலேஜ் இன்ஜினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஹரிபா ஹனிப் நடுவராக இருந்து 81 நிமிடங்களில் நடத்தி முடிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை பார்வையிட்டார். அதை அமெரிக்காவை தலைமையாக கொண்டு செயல்படும் வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் என்ற அமைப்பிற்கும் உலக சாதனைக்காக பரிந்துரை செய்துள்ளார்.
இந்த படம் குறித்து இயக்குனர் சிவ மாதவ் மாதம் கூறுகையில், இந்தப் படத்தில் ஹீரோயின், சண்டை, பாடல் என்று எதுவும் கிடையாது. ஆனால் படம் மிகவும் சுவாரசியமாக இருக்குமாறு ஹாலிவுட் தர தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது.
இது முழுக்க முழுக்க விஞ்ஞானம் சார்ந்த படமாகும். இதை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் ரசிப்பார்கள். படம் 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு இருந்தாலும் திரையில் இரண்டு மணி நேரம் ஓடும் என்று தெரிவித்துள்ளார்.