நடிகர்களின் பெயரை பார்த்து தியேட்டருக்குச் சென்று கொண்டாடும் ரசிகர்கள் இருக்கும் காலகட்டங்களில் ஒரு சில இயக்குனர்களின் பெயருக்காகவே தியேட்டருக்கு செல்லும் ரசிகர்களின் கூட்டம் இருந்தது.
அப்படிப்பட்டவர்களில் தவிர்க்க முடியாதவர் பாரதிராஜா. பாரதிராஜாவின் பட ரிலீஸ் என்றாலே அன்றைய காலகட்டத்தில் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும். பல நடிகர்களுக்கும் வாழ்க்கை கொடுத்தவர்.
இவ்வளவு ஏன் தன்னால் ஒரு கல்லைக்கூட நடிக்க வைக்க முடியும் என நம்பிக்கை கொண்டவர். அப்படி புதுமுக நடிகர்கள் ஏராளமானோரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி பின்னர் பெரிய நடிகர்களாக உயர்த்தி விட்டார்.
அந்த வகையில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படங்களில் மறக்க முடியாத படமாக அமைந்தது 1994 ஆம் ஆண்டு வெளியான கருத்தம்மா. இந்த படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் ராஜஸ்ரீ. பாரதிராஜா இவரைத் தேர்வு செய்தபோது அவருடைய உதவி இயக்குனர்களுக்கே அந்த நடிகை மீது நம்பிக்கை இல்லையாம். அதுமட்டுமில்லாமல் அவரின் ஒரு சில காட்சிகளை இயக்கிய பாரதிராஜாவுக்கு அந்த நடிகையின் நடிப்பு திருப்திகரமாக அமையவில்லை.
இதை உணர்ந்த ராஜஸ்ரீ, பாரதிராஜாவிடம் தனக்கு நடிப்பு வரவில்லை என கூறி கண்ணீர் விட்டாராம். இதைப் பார்த்த பாரதிராஜா, இவருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து இவரை சிறந்த கதாநாயகியாக மாற்ற முடியும் என நம்பிக்கை வைத்து அந்தப் படம் முழுக்க எப்படி நடிக்க வேண்டும் என்பதை எல்லாம் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தாராம் பாரதிராஜா.
அதன்பிறகு தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாகவும், சீரியல்களில் நாயகியாகவும் நடித்திருந்தார். இவ்வளவு ஏன் சமீபத்தில் பாலா இயக்கத்தில் வெளியான வர்மா படத்தில் கூட ஹீரோயின் அம்மாவாக நடித்திருந்தார் ராஜஸ்ரீ.