சின்னத்திரையில் தற்போது பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. எத்தனை நிகழ்ச்சிகள் வந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஷோ மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
புதுமையான நிகழ்ச்சி என்ற ஒரு காரணம் இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடம் கமல் கலகலப்பாக உரையாடுவதும், அவரின் பேச்சு திறமையும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இதன் காரணமாகவே கமல்ஹாசன் வரும் வார இறுதி நாட்களில் விஜய் டிவியின் டிஆர்பி எகிறியது. ஒவ்வொரு சீசனிலும் கமல்ஹாசன் தன்னுடைய பேச்சால் நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டி வருகிறார்.
தற்போது ஒளிபரப்பாகி வரும் ஐந்தாவது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது திடீரென்று கமல்ஹாசனுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் டிவி நிர்வாகம் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவது என்ற குழப்பத்தில் இருந்தது. கமல்ஹாசனுக்கு பதில் வேறு சிலர் தொகுத்து வழங்க இருப்பதாக பல வதந்திகள் பரவி வந்தது.
ஆனால் கமலஹாசனை விட சிறப்பாக வேறு யாரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என்பதை உணர்ந்த நிர்வாகம் தற்போது அதற்காக ஒரு புதிய முறையை கையில் எடுத்துள்ளது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்தே ஜூம் கால் மூலம் நடத்த முடிவு செய்துள்ளது.
இதற்காக விஜய் டிவி கமல்ஹாசன் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அவர்கள் கமல்ஹாசன் உடல்நிலை சீராக இருப்பதால் நிகழ்ச்சியை நடத்தலாம் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.
இதனால் ரசிகர்கள் விருப்பப்படி அடுத்த இரண்டு வாரங்களுக்கு கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதைப் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.