பெற்றோர்களே உஷார்.! நொடியில் உயிரை குடிக்கும் ஸ்மோக் பிஸ்கட், அதிர்ச்சி ரிப்போர்ட்

Smoke Biscuit: பாரம்பரியமாக சாப்பிட்ட காலம் போய் இப்போது உணவு பொருட்களில் நாகரிகம் தலை காட்டத் தொடங்கிவிட்டது. புதுசு புதுசாக வரும் உணவுகளுக்கு இன்றைய தலைமுறை கிட்டத்தட்ட அடிமையாகவே மாறிவிட்டனர்.

அப்படி தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது ஸ்மோக் பிஸ்கட். பலரும் இதை ஆர்வத்தோடு சாப்பிடுவது மட்டுமல்லாமல் ரீல்ஸ் வீடியோக்களாக சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் இப்போது இது பலருக்கும் உயிர் பயத்தை காட்டி இருக்கிறது. அதே சமயம் சர்ச்சைக்கும் ஆளாகியுள்ளது. அதாவது நேற்று ஹைதராபாத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் இந்த பிஸ்கட்டை சாப்பிட்டு வலியால் துடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

இதை பார்த்து அனைத்து பெற்றோர்களும் தற்போது பீதி அடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து இந்த ஸ்மோக் பிஸ்கட்டுக்கு எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளது.

தற்போது இது பற்றி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஷ்குமார் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். திரவ நைட்ரஜனை பயன்படுத்தி செய்யும் உணவுப் பொருட்கள் உணவு விடுதிகள், பார்ட்டி போன்ற இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

உயிருக்கு ஆபத்தை தரும் ஸ்மோக் பிஸ்கட்

அதற்கான சர்வே தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. திரவ நைட்ரஜன் என்பது மைனஸ் 196 டிகிரியில் இருக்கும். அது உணவுப் பொருட்களை பதப்படுத்த பயன்படுகிறது.

இது உடலில் எந்த பாகங்களில் பட்டாலும் அது அப்படியே கருகி ஓட்டை போட்டு விடும். அந்த அளவுக்கு உயிருக்கு கேடு விளைவிக்கும் ஆபத்தான பொருளாகும்.

இது உணவுப் பொருட்கள் கெடாமல் உறைநிலையில் வைக்க மட்டுமே உதவும். அதை நாம் உணவாக சாப்பிடுவது நல்லது கிடையாது. அதனால் யாரும் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது இந்த உணவுகளுக்கு இயக்குனர் மோகன் ஜி உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனால் கூடிய விரைவில் இது தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.