திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் நடந்தது என்ன.? ஆளும் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் அரசியல் தலைவர்கள்

Armstrong murder: ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் நடு ரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி இருக்கிறது. மாயாவதி தலைமையின் கீழ் இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் தான் ஆம்ஸ்ட்ராங்.

அரசியல்வாதி என்பதை தாண்டி இவர் ஒரு வக்கீல். அவருடைய சமூகத்திற்கு நிறைய நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். இவருக்கு தினமும் இரவு வீட்டு வாசலில் நண்பர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் பேசி விட்டு அதன் பின்பு தூங்கப்போகும் பழக்கம் இருந்திருக்கிறது.

இதை நன்றாக கவனித்துக் கொண்டு தங்களுடைய வேட்டையை காட்டி இருக்கிறார்கள் கொலைகாரர்கள். உணவு டெலிவரி செய்ய வருவது போல் உள்ளே நுழைந்து ஆம்ஸ்ட்ராங் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

அவருடன் கூட இருந்தவர்கள் கொலைகாரர்களை நோக்கி ஓட ஆனால் அவர்கள் ரொம்பவும் சாதுரியமாக அந்த இடத்தை விட்டு ஓடி மறைந்திருக்கிறார்கள். அதன் பின்னர் ஆம்ஸ்ட்ராங்கை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் தலை விரித்தாடும் வன்முறை

வட சென்னையில் இந்த சம்பவம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. சினிமா இயக்குனர் பா ரஞ்சித் நேற்று தலையில் அடித்துக் கொண்டு அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரலாகியது.

தன்னுடைய கட்சியின் தலைவி மாயாவதியை தமிழகத்திற்கு அழைப்பு வந்து ஆம்ஸ்ட்ராங் நடத்திய பேரணி இந்திய அளவில் ட்ரெண்டானது. இதனால் இவருக்கு நிறைய பகையும் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. நாங்கள் தான் அவரை கொலை செய்தோம் என்று சொல்லி எட்டு பேர் போலீசில் சரணடைந்து இருக்கிறார்கள்.

பழிவாங்கும் நோக்கத்தில் செய்யப்பட்ட கொலை என போலீஸ் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது. இருந்தாலும் தெளிவான காரணம் எது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ஆம்ஸ்ட்ராங் வீடு, அவரது உடல் வைத்திருக்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இப்படி ஒரு வன்முறையை தமிழ்நாட்டில் நடந்திருப்பது முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என அந்த மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தன்னுடைய டிவிட்டரில், ஆம்ஸ்ட்ராங்க மரணத்திற்கு வருத்தம் தெரிவித்ததோடு, தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு மக்களின் பாதுகாப்பிற்கும் ஆளும் அரசு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல்தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக கொந்தளித்து பேசி இருக்கிறார்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து இருப்பதோடு, காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு காங்கிரஸ் உறுப்பினர்களிடம் தொடர்ந்து இது பற்றி விசாரித்து கொண்டிருப்பதாகவும், குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்க அரசு உறுதி செய்யும் என நம்புவதாகவும் பதிவிட்டு இருக்கிறார்.

வழக்கம்போல முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம் தன் கடமையை செய்யும் என சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் இது முதன்முதலில் நடக்கும் கொலை இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

பாஜக நிர்வாகி, அதிமுக நிர்வாகி, திமுக நிர்வாகி என பெரிய பெரிய அரசியல் தலைகளின் கொலைகள் தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இவ்வளவு பெரிய ஆட்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்றால், சாமானிய மனிதர்களின் பாதுகாப்பு பெரிய கேள்விக்குறி ஆகிவிட்டது.

Trending News