ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அதில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு குணச்சித்திர நடிகர்களும் முக்கியம். அப்படி பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் ரங்கம்மா பாட்டி.
இவர் எம்ஜிஆர் நடித்த விவசாயி திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சீவலப்பேரி பாண்டி என்னும் திரைப்படத்தில் நடிகர் நெப்போலியனுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார்.
வடிவேலு, கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதுதவிர மலையாள நடிகர் மோகன்லாலுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ள அவருக்கு மோகன்லால் ரொம்பவும் பழக்கமாம். மேலும் குட்டிமா என்ற குறும் படத்திலும் இவர் நடித்துள்ளார். அதில் அவருடைய நடிப்புக்காக பல விருதுகள் பெற்றார். இவர் இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ரங்கம்மா பாட்டி உடல் நல குறைவு காரணமாக தனது சொந்த கிராமத்தில் வசித்து வருகிறார். இதுவரை பல திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் அவர் சம்பாதித்த பணம் அனைத்தையும் தன் குடும்பத்திற்கே செலவழித்துள்ளார். மேலும் அவர் தன்னிடம் யார் கஷ்டம் என்று கேட்டாலும் உடனே உதவி செய்வார்.
அப்படிப்பட்ட பாட்டிக்கு தற்போது அவருக்கு உதவி செய்ய ஆள் இல்லாமல் மிகவும் கஷ்டத்தில் இருந்து வருகிறார். பல நடிகர்களுடன் நடித்த இவருக்கு தற்போது யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. நடிகர் வடிவேலு கூட ஒரு முறை இவருக்கு வெற்றிலை, பாக்கு வாங்கி கொள்வதற்காக ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். அது தவிர வேறு எந்த உதவியையும் அவர் இதுவரை பாட்டிக்கு செய்யவில்லையாம்.
தற்போது கிராமத்தில் வசித்து வரும் ரங்கம்மா பாட்டி, அவரின் உறவினர்கள் அனைவரும் வீட்டுக்குள் தங்கியிருக்க, இவருக்கு தங்குவதற்கு இடமில்லாமல் வீட்டின் முன் ஒரு ஓரமாக தங்கியுள்ளார். எனக்கு ஒரு குடிசை கட்டுவதற்கு உதவி செய்தால் போதும் என்று கூறும் பாட்டி, நடிகர் லாரன்ஸிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் அவரும் இதுவரை பாட்டிக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.

விரைவின் தனக்கு உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் பாட்டியின் தற்போதைய நிலை அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் இது போன்று கஷ்டத்தில் வாடும் துணை நடிகர்களையும் கவனித்தால் நன்றாக இருக்கும்.