ஒரு திரைப்படம் மக்களை சென்றடைவதில் தியேட்டருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இப்பொழுது திரும்பும் பக்கமெல்லாம் தியேட்டர்கள் வந்துவிட்டன. ஆனால் 80 காலகட்டத்தில் ஒரு சில தியேட்டர்கள் மட்டுமே இருந்தது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
அதிலும் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டுமே திரையிடப்பட்டு வந்தது. நடிகர் கமல்ஹாசன் அவர்களின் திரைப்படம் தேவி, மகாராணி போன்ற தியேட்டர்களில் மட்டுமே திரையிடப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படம் உதயம், ஆல்பர்ட், அபிராமி போன்ற தியேட்டர்களில் மட்டுமே திரையிடப்பட்டது. இவர்களின் படங்கள் திரையிடப்படும் அன்று ஊரே கோலாகலமாக இருக்கும்.
அன்றைய காலகட்டத்தில் கமல், ரஜினிக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. ரசிகர்கள் தாங்கள் விரும்பும் நடிகர்களுக்கென ரசிகர் மன்றம், நற்பணி மன்றம் போன்றவற்றை தொடங்கி தங்கள் அன்பை வெறித்தனமாக காட்டி வந்தனர்.
ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற பாட்ஷா திரைப்படம் ஆல்பர்ட் தியேட்டரில் வெளியிடப்பட்டது. இவரின் ரசிகர்கள் இந்த தியேட்டரில் திரைப்படம் வெளியான அன்று, ஒரிஜினல் ஆட்டோவையே கட்டவுட்டாக வைத்து படத்தை விளம்பரப்படுத்தினர். இதனால் அன்றைய தினம் சென்னை எக்மோரே டிராபிக்கில் மிதந்தது.
ரஜினி ரசிகர்களை கட்டுபடுத்த முடியாமல் போலிஸ் திணறினர். இப்பொழுது எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்தாலும் அதிக நாட்கள் ஓடுவதில்லை. ஆனால் எண்பதுகளில் வெளிவந்த திரைப்படங்கள் ஒரு வருடம் கூட ஓடிய வரலாறு உண்டு.