தமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரசாரத்தில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தமிழக முதல்வர் எடப்பாடியார் தனது கட்சியான அதிமுகவிற்காக ஊர் ஊராக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் எடப்பாடியார் தற்போது கோவை மாவட்டத்தில் உள்ள புலிகுளத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளாராம்.
இந்த நிலையில் பிரச்சாரத்தின் போது, முதல்வர் எடப்பாடியார் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினை சரமாரியாக விமர்சனம் செய்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது பிரச்சாரத்தின்போது முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் கையில் வேலை எடுத்தாலும் முருகன் வரம் தர மாட்டார் என்றும், அதிமுகவிற்கு தான் முருகன் வரம் தருவார் என்றும் பேசியுள்ளார். அதுமட்டுமில்லாமல், இதுவரை கடவுள் இல்லை என்று கூறிய ஸ்டாலினின் கைகளால் கடவுள் வேலை எடுக்க வைத்திருக்கும் காட்சியை நாம் கண்கூடாக பார்க்கிறோம் என்று ஸ்டாலினை விமர்சனம் செய்திருக்கிறார் எடப்பாடியார்.
மேலும், அதிமுகவின் ஆட்சியின் போதுதான் முருக பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை தமிழகத்தில் அளிக்கப்பட்டதாகவும், அதிமுக அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்கிறது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக பேசிய எடப்பாடியார், ‘ஸ்டாலின் தேர்தல் வந்தாலே ஒருவிதமான கபட நாடகம் ஆட ஆரம்பித்து விடுவார். ஸ்டாலினை போல பகல் வேஷம் போடும் ஒருவரை நான் எங்கும் கண்டதில்லை’ என்று முதல்வர் சரமாரியாக ஸ்டாலினை விமர்சனம் செய்துள்ளார்.