முதல்வர் ஸ்டாலின் தன் தந்தை கலைஞர் கருணாநிதியின் வழியில் தற்போது தமிழகத்தை திறம்பட ஆட்சி செய்து வருகிறார். இந்த அரசியல் வாழ்விற்கு முன்னர் அவர் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் ஒரு நடிகராக கலக்கி இருக்கிறார் என்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.
ஸ்டாலின் இளம் வயதில் இரண்டு திரைப்படங்களிலும், இரண்டு சீரியல்களிலும் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் 1988 ல் ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால் என்ற இரண்டு திரைப்படங்கள் வெளியானது. கலைஞரின் திரைக்கதையில் வெளியான ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தில் ஸ்டாலின் உடன் இணைந்து நடிகர் கார்த்திக் நடித்திருப்பார்.
இந்தத் திரைப்படத்தில் ஸ்டாலின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக போராடும் புரட்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் இறுதியில் அவர் இறப்பது போன்ற ஒரு காட்சி வரும் அந்த காட்சியைப் பார்த்து கதறி அழுத பல திமுக தொண்டர்களும் உண்டு.
அதன் பிறகு வெளியான மக்கள் ஆணையிட்டால் என்ற திரைப்படத்தில் இவருடன் இணைந்து கேப்டன் விஜயகாந்த் நடித்து இருந்தார். அந்த படத்தின் போதே இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தனர். அந்த நட்பின் காரணமாக தான் ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நண்பர் விஜயகாந்தை பார்க்க அவரது இல்லத்திற்குச் சென்றார்.
இந்த இரு படங்களை தவிர அவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். அப்போது பிரபலமாக இருந்த தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான குறிஞ்சி மலர் என்ற தொடரில் இவர் நடித்திருந்தார். இந்த சீரியலில் அவர் ஏழை மக்களுக்காக தன்னுடைய உயிரை தியாகம் செய்யும் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து சூர்யா என்ற சீரியலிலும் அவர் நடித்தார். அதன் பிறகு அவர் நடிப்பை விட்டு விட்டு தீவிர அரசியலில் தந்தை வழியில் களமிறங்கினார். தற்போது அவர் விட்ட அந்த நடிப்பை அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து வருகிறார்.