தமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் தமிழக முதல்வர் எடப்பாடியார் தனது கட்சியான அதிமுக-விற்காக ஊர் ஊராக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது பேசிய முதல்வர் சொத்துக்கு மேல் சொத்துக்கள் குவிப்பதற்காக பதவியை தேடி அலைபவர்கள் தான் திமுகவினர் என்றும், அதிமுகவில் மட்டும்தான் ஒரு தொண்டன் கூட முதல்வனாக முடியுமென்றும், ஆனால் திமுகவில் வாழையடி வாழையாக வாரிசு ஆட்சிதான் நடக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடியார், தான் தனது தொகுதியில் சேவல் சின்னத்தில் நின்று சட்டமன்ற உறுப்பினர் ஆனதாகவும், ஆனால் ஸ்டாலினோ தனது அப்பாவின் செல்வாக்கை பயன்படுத்தி சட்டமன்ற உறுப்பினரானார் என்றும் கூறி திமுகவை பெருமளவு விமர்சித்துள்ளார்.
மேலும் பேசிய எடப்பாடியார், ‘ஜனவரி 27 க்கு பிறகு என் ஆட்சி இருக்காது என்று ஸ்டாலின் கூறுவது வியப்பாக உள்ளது. கண்டிப்பாக அதற்கு பிறகும் எனது ஆட்சி இருக்கும். ஆனால் முக அழகிரி கட்சி தொடங்கினால் திமுக உடைவது உறுதி. அப்போது ஸ்டாலின் கண்டிப்பாக காணாமல் போவார்’ என்று கூறியுள்ளார்.