தமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சிகளும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது தமிழகத்தை ஆட்சி புரிந்துவரும் எடப்பாடி கே பழனிசாமி அவரது கட்சியான அதிமுகவின் சார்பாக ஊர் ஊராக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
மேலும் தற்போது பெங்களூர் சிறையில் இருந்த சசிகலா விடுதலை ஆனதால், தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதுமட்டுமில்லாமல், சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுக நிர்வாகிகளை முதல்வரும், துணை முதல்வரும் அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வேலூரில் பிரச்சாரம் செய்த எடப்பாடியார், அமமுக கட்சியை நம்பி சென்றால், அவர்கள் நடுத்தெருவில் நிற்பது உறுதி என்று தெரிவித்திருக்கிறார்.
அதாவது தற்போது அதிமுகவில் இருக்கும் உறுப்பினர்கள் யாரெல்லாம் சசிகலாவிற்கு அல்லது அமமுக கட்சிக்கோ ஆதரவாக செயல்படுகிறார்களோ அவர்களையெல்லாம் அதிமுக கட்சி நீக்கி வருகிறது. அந்தவகையில் தற்போது வரை 18 சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கியுள்ளது அதிமுக.
மேலும் இதனை குறிப்பிட்டு தான் எடப்பாடியார், தனது பிரச்சாரத்தின் போது அமமுக கட்சியை நம்பி சென்ற உறுப்பினர்கள் நடுரோட்டில் இருப்பதாக கட்சியினரை எச்சரித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர், 10 ஆண்டுகாலமாக கட்சியில் உறுப்பினராக இல்லாத டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்ற முயற்சி செய்து வருவதாகவும், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு சிலர் மறைமுகமாக உதவி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் இவை அனைத்தையும் அதிமுக முறியடித்து வெற்றிவாகை சூடும் என்று சூளுரைத்து இருக்கிறார் முதல்வர்.