அனிருத் திருமணம் எப்போது? மௌனம் கலைத்த தந்தை ரவி ராகவேந்திரா
தமிழ் திரையுலகில் தற்போது டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத் ரவிச்சந்தர். ரஜினிகாந்த், விஜய், அஜித் எனப் பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு பேக்-டு-பேக் இசையமைத்து வரும் இவர், தனது துள்ளலான இசையால் இளைஞர்களை கட்டிப்போட்டுள்ளார். எப்போதும் ஸ்டுடியோ, கச்சேரி என செம பிஸியாகவே இவர் இயங்கி வருகிறார்.
மலேசியாவில் 'ஜனநாயகன்' இசைத் திருவிழா: ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 27-ம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்கள் ஹிட்டடித்த நிலையில், மீதமுள்ள பாடல்களுக்காக ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர்.
திருமணத்தை மறந்த அனிருத்? சினிமாவில் அறிமுகமான முதல் நாளில் இருந்தே அனிருத் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார். இசை கச்சேரிகள், உலகளாவிய சுற்றுப்பயணங்கள் என ஓடிக்கொண்டிருக்கும் அனிருத், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்து யோசிக்கவே நேரமில்லாமல் இருக்கிறாரா? என்கிற கேள்வி நீண்ட நாட்களாகவே சமூக வலைதளங்களில் உலவி வருகிறது.
மனம் திறந்த தந்தை: அனிருத்தின் திருமணம் பற்றி அவரது தந்தையும் நடிகருமான ரவி ராகவேந்திரா சமீபத்திய பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இன்றைய தலைமுறை இளைஞர்களின் மனநிலை குறித்துப் பேசிய அவர், அனிருத்தின் திருமணம் எப்போது என்பது குறித்தும் மறைமுகமாக சில விஷயங்களைக் கூறியுள்ளார்.
பெற்றோர் பார்க்கும் பெண்ணா? திருமணம் குறித்துப் பேசிய ரவி ராகவேந்திரா, "இக்காலத்துப் பசங்க யாருமே அப்பா அம்மாவிடம் வந்து நீங்களே பெண் பாருங்கள் என்று சொல்வதில்லை. 'நான் திருமணம் செய்து கொள்கிறேன்' என்று ஒரு தகவலாகத்தான் சொல்கிறார்களே தவிர, பெற்றோரின் விருப்பத்தை எதிர்பார்ப்பதில்லை" என எதார்த்தமான உண்மையை உடைத்துள்ளார்.
அனிருத்தின் முடிவுக்காக காத்திருப்பு: தனது மகன் அனிருத் எப்போது பச்சைக்கொடி காட்டுகிறாரோ, அப்போதுதான் திருமணம் நடக்கும் என்பதை அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார். "பார்ப்போம், அனிருத் எப்போது சொல்கிறார் என்று" என அவர் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அனிருத்தின் திருமணம் அவர் எடுக்கும் முடிவிலேயே உள்ளது என்பது தெளிவாகியுள்ளது.
