ஜனநாயகன் பட முழு பிசினஸ் ரிப்போர்ட்.. வியக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்!
தளபதி விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால் 'ஜனநாயகன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது.
விஜய் தனது அரசியல் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக நடிக்கும் கடைசித் திரைப்படம் என்பதால், 'ஜனநாயகன்' திரைப்படம் இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஒரு மெகா பட்ஜெட் படத்தின் வெற்றி என்பது அதன் ரிலீசுக்குப் பிந்தைய வசூலை வைத்தே கணக்கிடப்படும். ஆனால், இந்தப் படம் ரிலீசுக்கு முன்பே பிசினஸ் ரீதியாக மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.
சுமார் ரூ. 352.60 கோடி செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம், தற்போதைய நிலவரப்படி அனைத்து உரிமைகளும் விற்கப்பட்டதன் மூலம் ரூ. 452 கோடி வருவாயைப் பெற்றுள்ளது. இதன் மூலம் படம் திரையரங்கிற்கு வரும் முன்பே தயாரிப்பு நிறுவனத்திற்கு சுமார் ரூ. 100 கோடி நிகர லாபம் கிடைத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த இமாலய பிசினஸில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானது. தமிழகத் திரையரங்க உரிமம் மட்டும் ரூ. 105 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. அண்டை மாநிலங்களான கேரளாவில் ரூ. 15 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ. 12 கோடியும் பிசினஸ் நடந்துள்ளது. கர்நாடகாவைப் பொறுத்தவரை, தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் (KVN) நேரடியாகவே படத்தை வெளியிடுகிறது.
இருப்பினும் அங்கிருந்து மட்டும் சுமார் ரூ. 20 கோடி வரை ஷேர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட இந்தியாவில் ரூ. 9 கோடிக்கு உரிமம் விற்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டுத் திரையரங்க உரிமம் மட்டும் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரூ. 78 கோடிக்கு கைமாறியுள்ளது. இது விஜய்யின் சர்வதேச மார்க்கெட் எந்தளவு உயர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
திரையரங்கு வசூல் ஒருபுறமிருக்க, படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளும் போட்டி போட்டுக்கொண்டு விற்பனையாகியுள்ளன. குறிப்பாக, பிரபல ஓடிடி தளம் இதன் டிஜிட்டல் உரிமையை ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ளது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் (சாட்டிலைட்) ரூ. 64 கோடிக்கும், பாடல்களுக்கான ஆடியோ உரிமை ரூ. 29 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
விஜய்யின் திரைப்பயணத்திலேயே இதுதான் மிகப்பெரிய பிசினஸ் எனக் கூறப்படுகிறது. படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்த பிசினஸ் புள்ளிவிவரங்கள் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.
