அவதூறுக்கு அஞ்சாத சின்மயி.. பளார் விட்ட பதிலடியால் பதறிப்போன மார்ஃபிங் கும்பல்!
பிரபல பாடகி சின்மயி, தனது மார்ஃபிங் செய்யப்பட்ட மற்றும் ஏ.ஐ புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு, அவதூறு பரப்பப்பட்டதற்கு எதிராகக் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
சமீபகாலமாக, பிரபலங்கள் மற்றும் பொதுவெளியில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மார்ஃபிங் செய்து, ஆபாசமான மற்றும் அவதூறான முறையில் சமூக வலைதளங்களில் பரப்புவது அதிர்ச்சி அளிக்கும் விதமாக அதிகரித்து வருகிறது. இந்தத் தாக்குதலுக்குள்ளானவர்களில் ஒருவர் பிரபல பாடகியும், சமூக செயல்பாட்டாளருமான சின்மயி ஸ்ரீபாதா.
சின்மயியின் மார்ஃபிங் செய்யப்பட்ட மற்றும் ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், குறிப்பிட்ட எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டது. அத்துடன், அந்தப் பதிவில் சின்மயியை மிகக் கேவலமாக விமர்சிக்கும் விதமாக மோசமான தலைப்புகளையும் பதிவிட்டிருந்தனர்.
இதையடுத்து, சைபர் கிரைம் பிரிவில் சின்மயி உடனடியாகப் புகார் அளித்தார். தனது புகாருக்கு ஆதாரமாக, அந்த அவதூறு பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்ததுடன், அந்தப் பதிவின் கீழ் மிகவும் அருவருக்கத்தக்க கருத்துகளைப் பதிவிட்டவர்களின் புகைப்படங்களையும், அவர்களின் சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து சேகரித்து, சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்காகத் தயார் செய்தார்.
சின்மயி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில் மிகவும் ஆவேசத்துடன் பேசியுள்ளார். இது இணையத்தில் காட்டுத் தீயாகப் பரவி வருகிறது. "பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு அடங்கிப் போக வேண்டும் என்ற எண்ணம் ஆணாதிக்க சமூகத்தில் பலருக்கும் உள்ளது. அப்படி அடங்கிப் போகாத பெண்களும், பெண் குழந்தைகளும் செத்துப் போகலாம் என்று இந்தக் குரூர புத்தி கொண்டவர்கள் பதிவிடுகிறார்கள்" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
மேலும் அவர், "ஆணாதிக்கவாதிகள் எப்போதுமே பெண்கள் அடங்கிப் போக வேண்டும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து கேள்வி கேட்பவர்களையும், எதிர்த்துப் பேசும் பெண்களையும் தொடர்ந்து ஏதாவது ஒருவகையில் இழிவுபடுத்திக் கொண்டேதான் இருப்பார்கள்.
முன்பு எல்லாம் பேய் பிடித்தவள், வசியம் செய்பவள் என்று சொல்லி வந்தார்கள். ஆனால் இன்றைக்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஏ.ஐ மூலம் மார்ஃபிங் புகைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள். இந்த அயோக்கியர்களுக்கு இதையெல்லாம் தவிர வேறு எதுவும் தெரியாது" என்று அனல் கக்கியுள்ளார்.
சின்மயியின் இந்தத் துணிச்சலான வீடியோவுக்கு, சமூக வலைதளப் பயனர்கள் மற்றும் பல பிரபலங்கள் மத்தியில் பெரும் ஆதரவு குவிந்து வருகிறது. சைபர் தாக்குதலுக்கு எதிராக, அவர் எடுத்துள்ள சட்டப்பூர்வ நடவடிக்கையைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இது, பொதுவெளியில் பெண்கள் சந்திக்கும் இணையத் தாக்குதலுக்கு எதிரான ஒரு முக்கியமான குரலாகப் பார்க்கப்படுகிறது.
