ஹாலிவுட் பிரம்மாண்டம் vs தமிழ் மண்வாசனை.. திரையரங்கில் டிசம்பர் 19 மோதல்!
டிசம்பர் 19, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் மூன்று பிரம்மாண்டத் திரைப்படங்களைப் பற்றிய விரிவான பார்வை.
அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்
ஹாலிவுட்டின் சாகசப் படங்களின் சக்ரவர்த்தி ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் 'அவதார்' வரிசையில் வெளிவரும் மூன்றாம் பாகம் இது. இந்த முறை, ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்) மற்றும் நெய்திரி (ஸோ சல்டானா) குடும்பத்தினர், பாண்டோரா கிரகத்தின் எரிமலைப் பகுதிக்குச் செல்கின்றனர்.
அங்குள்ள, இதுவரை காணாத, மிகவும் வன்முறையும் சவாலும் நிறைந்த 'ஆஷ் பீப்பிள்' (Ash People) எனப்படும் புதிய நா’வி பழங்குடியினரை எதிர்கொள்கின்றனர். இவர்களின் தலைவியாக 'வரங்' என்ற கதாபாத்திரத்தில் ஊனா சாப்ளின் நடிக்கிறார்.
இதுவரை நா’வி மக்கள் பெரும்பாலும் நல்லவர்களாகவே சித்தரிக்கப்பட்ட நிலையில், ஆஷ் மக்கள் மூலம் கேமரூன் நா’வி இனத்தின் மற்றொரு கோணத்தை அதாவது தீமையையும் காட்டுகிறார்.
3000 கோடிக்கும் அதிகமான பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த 3 மணி நேரத்துக்கும் மேலான அதிரடிப் படம், கண்கவர் காட்சி அமைப்புகளுடன் IMAX திரையரங்குகளில் ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கக் காத்திருக்கிறது. கர்னல் குவாரிச்சின் (ஸ்டீபன் லாங்) பழிவாங்கும் வேட்டையும், ஜேக் குடும்பத்தின் போராட்டம் மற்றும் நெய்டிரியின் உணர்ச்சிப்பூர்வமான இழப்புக்கு பிந்தைய கோபமும் படத்தின் முக்கியத் திருப்பங்களாக அமையும்.
கொம்பு சீவி
மக்களிடையே அதிக எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள தமிழ்த் திரைப்படங்களில், பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
இது விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், மற்றும் சுப்ரீம் ஸ்டார் ஆர். சரத்குமார் இணைந்து நடிக்கும் ஆக்ஷன் - காமெடித் திரைப்படமாகும். 1996 ஆம் ஆண்டில் ஆண்டிபட்டி மற்றும் உசிலம்பட்டி பகுதிகளில் வைகை அணை நீரால் பாதிக்கப்பட்ட 12 கிராமங்களின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சண்முக பாண்டியன் 'பாண்டி' என்ற பாத்திரத்திலும், சரத்குமார் 'ரோக்கா புலி' என்ற பாத்திரத்திலும் கிராமத்துப் பின்னணியில் அதிரடி காட்டியுள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அவரது கிராமியப் பின்னணி இசை, படத்தின் கதைக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
'ப ப ப' - பயம், பக்தி, பஹுமான்
மலையாளத் திரையுலகிலிருந்து, ஆக்ஷன் மற்றும் காமெடியைத் தூக்கலாகக் கொண்டுள்ள 'ப ப பா' (Bhayam, Bhakthi, Bahumanam) என்ற திரைப்படம் வெளியீட்டை உறுதி செய்துள்ளது. இப்படத்தில் முன்னணி நடிகர்களான திலீப், வினீத் சீனிவாசன், மற்றும் தியான் சீனிவாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
எல்லாவற்றையும் விட, மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் இதில் ஒரு நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். திலீப்பும் மோகன்லாலும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படத்தின் பெரும் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
'பயம், பக்தி, வெகுமானம்' என்ற தலைப்புக்கு ஏற்ப, பயம், பக்தி, மற்றும் மரியாதை ஆகிய மூன்று உணர்ச்சிகளை மையமாகக் கொண்டு பின்னப்பட்ட பரபரப்பான ஆக்ஷன் - காமெடி த்ரில்லர் தான் இப்படத்தின் கதைக்கரு.
இந்த மூன்று திரைப்படங்களும், உலக சினிமா ஆர்வலர்கள் முதல் உள்ளூர் மசாலாப் படங்களின் ரசிகர்கள் வரை அனைவருக்கும் இந்த கிறிஸ்துமஸ் விடுமுறைப் பருவத்தை சினிமா கொண்டாட்டமாக மாற்றத் தயாராக உள்ளன.
