1. Home
  2. சினிமா செய்திகள்

வா வாத்தியார் வெளியீட்டுத் தாமதம்.. ஓடிடி ஒப்பந்தத்தில் சிக்கல்!

vaa-vaathiyaar

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'வா வாத்தியார்' படத்தின் வெளியீட்டில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்றுள்ள அமேசான் பிரைம் வீடியோநிறுவனம் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவோ அல்லது ரத்து செய்யவோ வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் கார்த்தி முதன்முறையாகப் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும், இயக்குநர் நலன் குமாரசாமியின் 'வா வாத்தியார்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

அத்துடன், இந்தப் படம் நலன் குமாரசாமியின் முந்தைய படங்களான 'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தைக் கொண்டிருப்பதால், இது கார்த்தியின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் முன்னதாகவே திரைக்கு வரத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சில நிர்வாக ரீதியான மற்றும் படப் பிந்தைய வேலைகள்காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, படத்தின் தயாரிப்பாளர் எப்படியாவது 2025 டிசம்பர் மாதத்திற்குள் படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்கேற்றார் போல, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்தப் புதுப்பித்த வெளியீட்டுத் தேதி மேலும் அதிகரித்துள்ளது.

இந்தச் சூழலில், 'வா வாத்தியார்' படத்தின் டிஜிட்டல் உரிமையை ஒரு முன்னணி ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கியிருந்தது. பொதுவாக, ஓடிடி ஒப்பந்தங்களில் படம் வெளியாகும் தேதி அல்லது வெளியீட்டுக் காலக்கெடு முக்கியமாக இருக்கும்.

சொன்ன படி படம் குறிப்பிட்ட தேதிக்குள் அல்லது நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வெளியாகாத பட்சத்தில், ஒப்பந்தத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது ஏற்பட்டிருக்கும் தாமதம் காரணமாக, பிரைம் வீடியோ நிறுவனம் தனது ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவோ அல்லது வேறு சில கட்டுப்பாடுகளை விதிக்கவோ கூடும் என்று திரையுலக வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. குறிப்பாக, இந்த ஆண்டுக்குள் படம் திரைக்கு வரவில்லை என்றால், பிரைம் வீடியோ நிறுவனம் தங்கள் ஒப்பந்தத்திலிருந்து முழுமையாகப் பின்வாங்கவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது உண்மையாகும் பட்சத்தில், தயாரிப்பாளருக்கு இது பெரும் நிதிச் சிக்கலை ஏற்படுத்தும். எனவே, 'வா வாத்தியார்' படக்குழு இந்தப் பிரச்சினைக்கு விரைந்து ஒரு தீர்வுகாணும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.