தனுஷின் மாஸ்டர் பிளான்.. 2026ல் மட்டும் இத்தனை படங்களா?
2025-ல் பல மொழிப் படங்களில் பிஸியாக இருந்த நடிகர் தனுஷ், 2026-ம் ஆண்டிற்கான தனது மாபெரும் திட்டங்களை வகுத்துள்ளார்.
தனுஷிற்கு 2025-ம் ஆண்டு ஒரு மைல்கல்லாக அமைந்தது. நடிப்பைத் தாண்டி இயக்கத்திலும் கவனம் செலுத்திய அவர், 'இட்லி கடை' மற்றும் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' ஆகிய படங்களின் மூலம் இயக்குநராகத் தனது முத்திரையைப் பதித்தார். அதுமட்டுமின்றி, தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா', ஹிந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'தேரே இஸ்க் மே' என பான்-இந்தியா ஸ்டாராக ஜொலித்தார். இந்த உற்சாகத்துடன் தற்போது 2026-ம் ஆண்டிற்கான அட்டவணையைத் தனுஷ் தயார் செய்துள்ளார்.
விக்னேஷ் ராஜா - தனுஷ் கூட்டணி
'போர் தொழில்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் விக்னேஷ் ராஜாவுடன் தனுஷ் தற்போது இணைந்துள்ளார். ஒரு கிரிப் இங் திரில்லராக உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2026-ம் ஆண்டின் முதல் பாதியில் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், தனுஷ் ரசிகர்களிடையே இப்போதே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'தனுஷ் 55'
'அமரன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 2026 ஜனவரி மாதம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வீரத்தையும் எமோஷனையும் கலந்த ஒரு ஆக்ஷன் கதையாக இது இருக்கும் எனத் தெரிகிறது. இந்தப் படம் தனுஷின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் எனக் கூறப்படுகிறது.
தமிழரசன் பச்சமுத்து மற்றும் வினோத் வரிசைக்கட்டும் படங்கள்
2026-ம் ஆண்டின் கோடை விடுமுறையை முன்னிட்டு, ஏப்ரல் மாதத்தில் தமிழரசன் பச்சமுத்து (லப்பர் பந்து படப்புகழ்) இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் தனுஷ் இணையவுள்ளார். இது ஒரு யதார்த்தமான வாழ்வியல் சார்ந்த கதையாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, ஜூலை 2026-ல் 'துணிவு' பட இயக்குநர் H. வினோத் இயக்கத்தில் ஒரு பிரம்மாண்ட படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். அரசியல் அல்லது சமூக அக்கறை கொண்ட ஒரு ஆக்ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாக வாய்ப்புள்ளது. ஒரே ஆண்டில் இத்தனை முன்னணி இயக்குநர்களுடன் தனுஷ் இணைவது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
