1. Home
  2. சினிமா செய்திகள்

இந்தியன் 3 தள்ளிப்போகிறதா? ஷங்கர் எடுத்த அதிரடி முடிவு

indian-3-shankar

ஷங்கரின் முந்தைய படங்கள் சறுக்கினாலும், 'வேள்பாரி' போன்ற ஒரு வலுவான கதையை அவர் கையில் எடுத்திருப்பது ரசிகர்களுக்கு மீண்டும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.


தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். ஆனால், சமீபத்தில் கமல்ஹாசனோடு இணைந்த 'இந்தியன் 2' மற்றும் ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் ஷங்கரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் பலமாக எழுந்தது.

தற்போது கிடைத்துள்ள நம்பகமான தகவல்களின்படி, 'இந்தியன் 3' திரைப்படம் சற்று தாமதமாகும் என்றும், ஷங்கர் தனது நீண்ட நாள் கனவுப் படமான 'வேள்பாரி' பணிகளை அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டார் என்றும் செய்திகள் தீயாய் பரவி வருகின்றன.

'எந்திரன்' படத்திற்குப் பிறகு தனக்கு மிகவும் பிடித்தமான, கட்டாயம் எடுக்க வேண்டிய படம் 'வேள்பாரி' தான் என இயக்குனர் ஷங்கர் பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார். எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் அவர்கள் எழுதிய நாவல் தான் இந்த 'வேள்பாரி'.

தமிழில் இதுவரை வெளியான நாவல்களில் அதிகப்படியான பிரதிகள் விற்றுத் தீர்க்கப்பட்ட சாதனையை இந்த புத்தகம் படைத்துள்ளது. சங்க காலத்து மன்னன் பாரியின் வீரத்தையும், அவன் இயற்கையோடு வாழ்ந்த வாழ்க்கையையும் மிக அழகாக விவரிக்கும் கதை இது.

'இந்தியன் 2' படத்தின் ரிசல்ட்டால் சற்று அப்செட்டில் இருந்த ஷங்கர், இப்போது முழு மூச்சாக வேள்பாரி திரைக்கதை மற்றும் ப்ரீ-புரொடக்ஷன் பணிகளில் இறங்கியுள்ளார். சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி அடுத்தாண்டு (2026) ஜுன் மாதம் படப்பிடிப்பு துவங்க அதிக வாய்ப்புள்ளது.

இது ஷங்கரின் படம் என்பதால், நிச்சயம் இந்திய சினிமாவே வியக்கும் வகையில் கிராபிக்ஸ் மற்றும் செட்கள் இருக்கும். இந்த நாவல் படமாகிறது என்ற செய்தி வெளியான உடனே, "பாரி மன்னனாக யார் நடித்தால் சிறப்பாக இருக்கும்?" என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நெட்டிசன்கள் பலரின் முதல் சாய்ஸ் சூர்யா தான். அவரது தோற்றத்திற்கும், குரலுக்கும் பாரி மன்னன் கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தும் என ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். 'ஏழாம் அறிவு' படத்தில் ஏற்கெனவே வரலாற்று கதாபாத்திரத்தில் சூர்யா மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், இயக்குனர் ஷங்கரின் ஆஸ்தான நாயகர்களில் ஒருவரான விக்ரமும் இந்த பந்தயத்தில் உள்ளார். ஏற்கெனவே இந்த கூட்டணி 'அந்நியன்', 'ஐ' போன்ற படங்களில் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்துள்ளது. கதாபாத்திரத்திற்காக உடல்மொழியை மாற்றிக்கொள்வதில் விக்ரம் கைதேர்ந்தவர் என்பதால், ஷங்கர் இவரை தேர்வு செய்யவும் வாய்ப்புகள் அதிகம்.

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.