சூர்யா விலகியதற்கு இதுதான் காரணமா? பராசக்தி உருவான கதை
சூர்யா நடிப்பதாக இருந்த 'புறநானூறு' திரைப்படம் கைமாறியதற்கான பின்னணி காரணங்களை இயக்குனர் சுதா கொங்கரா விளக்கியுள்ளார். கால்ஷீட் நெருக்கடி காரணமாக சூர்யா விலக, சிவகார்த்திகேயன் எப்படி இந்த பிரம்மாண்ட புராஜெக்டிற்குள் இணைந்தார் என்பது குறித்த சுவாரஸ்ய தகவல்.
சினிமா உலகில் ஒரு வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைகிறது என்றால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறும். அந்த வகையில் 'சூரரைப் போற்று' படத்தின் மெகா ஹிட்டிற்கு பிறகு, இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் சூர்யா மீண்டும் இணைவதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் ‘புறநானூறு’.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகவிருந்த இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், சமீபத்தில் இந்த படத்தில் சூர்யாவுக்கு பதிலாக சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகி இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியானது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் சுதா கொங்கரா இது குறித்து விரிவாகப் பேசியுள்ளார். கொரோனா காலத்திலேயே இக்கதையை சூர்யாவிடம் அவர் பகிர்ந்துள்ளார். கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப்போக, உடனே படத்தைத் தொடங்க ஆர்வம் காட்டினார். இருப்பினும், சூர்யாவின் கைவசம் அப்போது 'கங்குவா' போன்ற பிரம்மாண்ட படங்கள் வரிசையாக இருந்தன.
தொடர்ச்சியான படப்பிடிப்புத் தேதிகள் கிடைக்காததே இங்கு பெரும் தடையாக மாறியுள்ளது. இக்கதையின் தன்மைப்படி, ஒரே கட்டமாக படமாக்கினால் மட்டுமே பட்ஜெட்டை கட்டுக்குள் வைக்க முடியும். சூர்யாவின் பிஸியான கால்ஷீட் காரணமாக அது சாத்தியமில்லாமல் போனதால், ஒரு கட்டத்தில் இருவரும் பேசி ஒரு சுமூக முடிவுக்கு வந்துள்ளனர்.
இந்தச் சூழலில் தான் தயாரிப்பாளர் அருண் விஷ்வா, சிவகார்த்திகேயனுக்காக ஒரு கதையை சுதா கொங்கராவிடம் கேட்டுள்ளார். அப்போது 'புறநானூறு' கதையின் கருவை சிவாவிடம் சுதா விவரித்துள்ளார். கதையைக் கேட்ட மாத்திரத்திலேயே சிவகார்த்திகேயன் மிரண்டு போயுள்ளார்.
"எப்பொழுது வேண்டுமானாலும் தேதிகள் தருகிறேன், இப்போதே கையெழுத்து போடத் தயார்" என உற்சாகத்துடன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த படம் தான் பராசக்தி என்று டைட்டில் உருவாகி இருக்கிறது. மேலும் மிக விரைவில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் ப்ரமோஷன் படு பயங்கரமாக நடந்து வருகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது. சூர்யா தவறவிட்ட இந்த அரசியல் ஆக்சன் கதையை சிவகார்த்திகேயன் தனது ஸ்டைலில் எப்படி கொண்டு வரப்போகிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
