தமன்னாவை மிஞ்சும் பாலிவுட் புயல்! காவாலா-வை ஓரம் கட்ட வரும் நடிகை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தில் பாலிவுட் கிளாமர் குயின் நோரா பதேகி ஒப்பந்தமாகியுள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'ஜெயிலர்' திரைப்படம் உலகளவில் 600 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்தப் படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
குறிப்பாக, தமன்னா ஆடிய 'காவாலா' பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் முதல் வெளிநாட்டு ரசிகர்கள் வரை அனைவரையும் வைப் செய்ய வைத்த அந்தப் பாடலில், தமன்னாவுடன் இணைந்து ரஜினி ஆடிய நடனம் ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைந்தது.
'ஜெயிலர்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், "தமன்னாவுடன் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருந்தாலும், அவரிடம் மனம் விட்டுப் பேசுவதற்குப் போதிய வாய்ப்பு அமையவில்லை" என்று ஜாலியாக ஒரு வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.
தென்னிந்தியத் திரையுலகில் உள்ள முன்னணி நடிகைகளைத் தேடிப் பார்த்த நெல்சன், இறுதியில் பாலிவுட்டின் முன்னணி டான்ஸரான நோரா பதேகியை தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 'பாகுபலி' படத்தில் 'மனோகரி' பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்களைக் கவர்ந்த நோரா, இப்போது ரஜினியுடன் இணைந்து ஆடப்போவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இதற்கான பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
முதல் பாகத்தில் 'காவாலா' பாடல் ஏற்படுத்திய தாக்கத்தை விட, இரண்டாம் பாகத்தின் ஐட்டம் சாங் இன்னும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதில் அனிருத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். தமன்னாவின் அழகும் நடனமும் 'காவாலா'வை ட்ரெண்ட் ஆக்கியது போல, நோரா பதேகியின் கவர்ச்சியான நடனம் சர்வதேச அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியின் ஸ்டைலும் நோராவின் வேகமும் இணையும்போது, தியேட்டர்களில் விசில் சத்தம் விண்ணைப் பிளக்கும் என்பதில் சந்தேகமில்லை.
