1. Home
  2. சினிமா செய்திகள்

ஜனநாயகன் ஜனவரி 9ல் வருமா? கோர்ட்டில் நடந்த பரபரப்பு திருப்பம்!

jananayagan-vijay

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் ஜனவரி 9 அன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


விஜய் தனது திரைப்பயணத்தின் கடைசிப் படமாக அறிவித்துள்ள ஜனநாயகன் படத்தின் வெளியீடு தற்போது சட்டப் போராட்டங்களுக்கு மத்தியில் சிக்கியுள்ளது. ஜனவரி 9-ம் தேதி (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தணிக்கை வாரியத்திற்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் படத்தின் ரிலீஸை கேள்விக்குறியாக்கியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பி.டி. ஆஷா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பாக ஏற்கனவே பல விவாதங்கள் நடந்த நிலையில், ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வைத்த வாதம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தணிக்கை குழுவின் நடைமுறைகளை முடிக்க கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால், இந்த வழக்கின் தீர்ப்பு ஜனவரி 9-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தணிக்கை வாரியம் (CBFC) ஒரு படத்தை ஆய்வு செய்த பிறகு, அதில் திருப்தி ஏற்படவில்லை என்றாலோ அல்லது புகார்கள் எழுந்தாலோ அதனை 'மறு சீராய்வு குழு' பார்வைக்கு அனுப்புவது வழக்கம். ஜனநாயகன் படத்தின் விஷயத்திலும் இதே நடைமுறை தற்போது பின்பற்றப்படுகிறது. புதிதாக 5 பேர் கொண்ட குழு படத்தை முழுமையாகப் பார்த்து, அதன்பிறகே சான்றிதழ் வழங்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும்.

கே.வி.என் (KVN) புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பராசரன், இந்த தாமதம் திட்டமிட்டு செய்யப்படுவதாக வாதிட்டார். 5 பேர் கொண்ட குழுவில் ஏற்கனவே 4 பேர் படத்திற்கு ஆதரவாகவும், ஒருவர் மட்டுமே எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது 4:1 என்கிற பெரும்பான்மை அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடைசி நேரத்தில் படத்தை நிறுத்துவது தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

டிக்கெட் முன்பதிவு மற்றும் விளம்பரங்களுக்காக பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள நிலையில், ரிலீஸ் தேதியன்று தீர்ப்பு வருவது படக்குழுவினரை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. தணிக்கை குழு ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டு, இப்போது பின்வாங்குவது அந்த அமைப்பின் நம்பகத்தன்மைக்கே களங்கம் விளைவிக்கும் செயல் என்றும் வாதிடப்பட்டது.

விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளதால், அவர் திரையில் தோன்றும் கடைசிப் படம் இது என்பதால் தமிழகம் முழுவதும் திருவிழா கோலமாக காட்சியளித்தது. ஆனால், தணிக்கை குழுவின் இந்த 'சுத்த விடும்' போக்கால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.