ஜனநாயகன் ரிலீஸில் அடுத்தடுத்த சிக்கல்.. ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு!
விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழக அரசியல் மற்றும் சினிமா வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுவது நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) தொடக்கம். அவர் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன்னதாக நடிக்கும் கடைசித் திரைப்படம் என்பதால், 'ஜனநாயகன்' மீது உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களின் பார்வை விழுந்துள்ளது. முதலில் பொங்கல் விருந்தாக ஜனவரி 9 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம், சென்சார் போர்டு (CBFC) கெடுபிடிகளால் முட்டுக்கட்டை சந்தித்தது.
மத்திய தணிக்கை வாரியம் இந்தப் படத்திற்குச் சான்றிதழ் வழங்க மறுத்து, மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பியது. இதை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, படத்திற்கு உடனடியாக U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது.
இருப்பினும், தணிக்கை வாரியம் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீவத்ஸவா மற்றும் நீதிபதி அருள்முருகன் தலைமையிலான அமர்வு, தற்போது அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தனி நீதிபதி வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், இயற்கை நீதியின் அடிப்படையில் தணிக்கை வாரியத்தின் தரப்பு வாதங்களைக் கேட்க அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வழக்கில் நீதிபதிகள் மிக முக்கியமான சில கருத்துக்களை முன்வைத்தனர். "திரைப்படங்களுக்குத் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்கு முன்பே ரிலீஸ் தேதியை அறிவிப்பது தவறான நடைமுறை" எனத் தயாரிப்புத் தரப்பிற்கு அறிவுறுத்தினர். மேலும், 'ஜனநாயகன்' படத்திற்கு எதிராகத் தீவிரமான புகார்கள் எழுந்துள்ளதாகவும், அவற்றை விரிவாக ஆராய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தற்போது இந்த வழக்கு மீண்டும் தனி நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனம் தனது கோரிக்கைகளில் திருத்தம் செய்து புதிய மனுவைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் ஜனவரி மாதம் ரிலீஸ் என்பது கனவாகிப் போன நிலையில், தற்போது பிப்ரவரி மாத ரிலீஸும் சந்தேகத்தில் உள்ளது. சென்சார் வாரியம் படத்தின் சில வசனங்கள் அல்லது காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, படத்தின் அரசியல் வீச்சு மற்றும் தற்போதைய சூழல் தொடர்பான காட்சிகள் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படலாம்.
தயாரிப்புத் தரப்பு வழக்கறிஞர்கள், "தணிக்கை வாரியம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படவில்லை, இதனால் தயாரிப்பாளருக்குக் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என வாதிட்டாலும், சட்ட நடைமுறைகளைத் தாண்டி படம் விரைவில் திரைக்கு வருமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

