1. Home
  2. சினிமா செய்திகள்

பொங்கல் ரேஸுக்கு முன்பே மோதும் ஜனநாயகன் பராசக்தி.. எகிற போகும் TRP

parasakthi-jananayagan

2026 பொங்கலுக்கு விஜய்யின் 'ஜனநாயகன்' மற்றும் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதுகின்றன.


2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மறக்க முடியாத ஆண்டாக அமையப்போகிறது. தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கும் நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் மைல்கல் திரைப்படமான பராசக்தி ஆகிய இரண்டும் நேருக்கு நேர் மோதவுள்ளன. இந்த இரு படங்களின் இசை வெளியீட்டு விழாக்களும் ஒரே நாளில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதால் தற்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய், அரசியலில் முழுவீச்சில் ஈடுபட முடிவெடுத்துள்ளதால், அவரது திரைப்பயணத்தின் கடைசி படமான ஜனநாயகன் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை KVN புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் வரும் ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மறுபுறம், தமிழ் சினிமாவின் 'பிரின்ஸ்' என்று அழைக்கப்படும் சிவகார்த்திகேயன், தனது 25-வது படமான 'பராசக்தி' மூலம் களம் இறங்குகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை 'டான் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஜனநாயகன் வெளியான அடுத்த நாளே, அதாவது ஜனவரி 10-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. விஜய்யின் கடைசி படம் மற்றும் சிவகார்த்திகேயனின் 25-வது படம் என இரண்டுமே சென்டிமென்ட் ரீதியாகவும், கமர்ஷியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

திரையரங்குகளில் மோதிக்கொள்வதற்கு முன்பே, சின்னத்திரையில் இந்த இரண்டு படங்களும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜனவரி 4-ம் தேதி மதியம் 3 மணிக்கு 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக அதிக வாய்ப்புள்ளது. 

அதே சமயம், சிவகார்த்திகேயனின் பராசக்தி படக்குழுவும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், அதே ஜனவரி 4-ம் தேதி மதியம் 3 மணிக்கு சன் டிவியில் பராசக்தி ஆடியோ லாஞ்சை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். முந்தைய நாள் இரவு விழா முடிந்த கையோடு, மின்னல் வேகத்தில் எடிட்டிங் பணிகளை முடித்து ஒளிபரப்ப படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இரு முன்னணி நட்சத்திரங்களின் பட விழாக்கள் ஒளிபரப்பாவது டிவி டிஆர்பி ரேட்டிங்கில் பெரும் போட்டியை உருவாக்கும். விஜய்யின் மாஸ் பேச்சைக் கேட்பதா அல்லது சுதா கொங்கரா - SK கூட்டணியின் சுவாரஸ்யங்களைப் பார்ப்பதா என ரசிகர்கள் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளனர். எது எப்படியோ, வரும் 2026 பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மெகா விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.