அரசியல் வருகைக்கு அச்சாரமா? ஜனநாயகன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான 'தளபதி' விஜய், தனது முழுநேர அரசியல் பயணத்திற்கு முன்னதாக நடிக்கும் கடைசித் திரைப்படம் 'ஜன நாயகன்'. உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, ஜனவரி 3-ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தை அதிரவைக்க உள்ளது. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், முழுக்க முழுக்க விஜய்யின் அரசியல் வருகையை முன்னிறுத்தியே உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே மலேசியாவில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அனிருத் இசையமைப்பில் உருவான இந்தப் பாடல்கள், விஜய்யின் அரசியல் கொள்கைகளை உரக்கச் சொல்லும் வகையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், பாலிவுட் நடிகர் பாபி தியோல், மலையாள நடிகை மமிதா பைஜூ, சீனியர் நடிகர்களான நாசர், பிரகாஷ் ராஜ் மற்றும் பிரியாமணி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இதில் இணைந்துள்ளது.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) தயாரித்துள்ள இந்தப் படம், இன்னும் 9 நாட்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய்யின் சினிமா கேரியரில் இது இறுதிப் படம் என்பதால், பாக்ஸ் ஆபீஸில் இந்தப் படம் பல சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, டிரைலரில் விஜய்யின் அரசியல் வசனங்கள் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
