பொங்கலைத் தொடர்ந்து திரையரங்குகளில் குவியும் படங்கள்.. ஜனவரி 23ல் இத்தனை ரிலீஸா?
ஜனவரி 23-ஆம் தேதியன்று தமிழ் திரையுலகில் ஒரு மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் மோதல் உருவாகியுள்ளது.
2026 ஜனவரி 23 அன்று தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் மங்காத்தா மற்றும் 'தெறி' திரைப்படங்கள் மறுவெளியீடு செய்யப்படுகின்றன. இவற்றுடன் 'திரௌபதி 2', 'ஹாட்ஸ்பாட் 2' போன்ற புதிய படங்களும் வெளியாகின்றன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவான மங்காத்தா (2011) இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட். அஜித்தின் 50-வது படமான இதில் அவரது நெகட்டிவ் ஷேட் நடிப்பு மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் இசை இன்றும் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதேபோல், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி (2016) ஒரு கமர்ஷியல் பிளாக்பஸ்டர். விஜய்யின் லேட்டஸ்ட் படமான 'ஜன நாயகன்' குறித்த சர்ச்சைகள் நிலவி வரும் சூழலில், அவரது மாஸ் ஹிட் படமான தெறி மீண்டும் ரிலீஸ் ஆவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் திரௌபதி 2. 14-ஆம் நூற்றாண்டு வரலாற்றுப் பின்னணியில், ஹொய்சால பேரரசர் வீர வல்லாளன் III காலத்து சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. முதலில் பொங்கல் வெளியீடாகத் திட்டமிடப்பட்ட இந்தப் படம், தற்போது ஜனவரி 23-ல் வெளியாகிறது. இதில் ரக்ஷனா இந்துசூதன், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் 2024-ல் வெளியான 'ஹாட்ஸ்பாட்' திரைப்படத்தின் தொடர்ச்சியாக ஹாட்ஸ்பாட் 2 உருவாகியுள்ளது. சமூகக் கருத்துக்களை துணிச்சலாகப் பேசும் இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா மற்றும் அஸ்வின் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். விஷ்ணு விஷால் வழங்கியிருக்கும் இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவற்றுடன் மாயபிம்பம் என்ற புதிய திரைப்படமும் ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. அறிமுக இயக்குநர் கே. ஜே. சுரேந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாய பிம்பம் ' எனும் திரைப்படத்தின் ஆகாஷ் பிரபு, ஜானகி, ஹரி கிருஷ்ணன் , ராஜேஷ் ,அருண்குமார் உள்ளிட்ட பல புது முகங்கள் நடித்திருக்கிறார்கள். எட்வின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நந்தா இசையமைத்திருக்கிறார்.பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகும் இந்தப் படங்கள் தமிழ் திரையுலகிற்கு ஒரு சுறுசுறுப்பான தொடக்கத்தைத் தந்துள்ளன.
