நாங்க மட்டும் வர்றோம், நீங்க ஏன் வரமாட்டேங்குறீங்க? கிச்சா சுதீப் வைத்த கோரிக்கை!
கிச்சா சுதீப் தனது சமீபத்திய நேர்காணலில், தான் நட்புக்காக மட்டுமே பிற மொழிப் படங்களில் நடிப்பதாகவும், விஜய் மற்றும் சல்மான் கான் மீதான தனது மரியாதை குறித்தும் பேசியுள்ளார். மேலும், திரையுலகில் நிலவும் பாரபட்சம் மற்றும் தனது ஆரம்பக்கால கடின உழைப்பு குறித்தும் மனம் திறந்துள்ளார்.
கன்னடத் திரையுலகின் 'அபினய சக்ரவர்த்தி' கிச்சா சுதீப், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இந்தியத் திரைத்துறை, சக நடிகர்கள் மற்றும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பல அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்ட முக்கிய விஷயங்களின் தொகுப்பு இதோ.
திரைத்துறையில் மொழிகளைக் கடந்த ஒத்துழைப்பு என்பது இருவழிப் பாதையாக இருக்க வேண்டும் என்று சுதீப் ஆதங்கப்பட்டுள்ளார். "நாங்கள் மற்ற மொழிப் படங்களில் சிறப்புத் தோற்றங்களில் நடிக்கிறோம், ஆனால் மற்ற மொழி முன்னணி கலைஞர்கள் எங்கள் படங்களுக்கு வருவது அரிதாகவே உள்ளது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காகச் சில முன்னணி கலைஞர்களிடம் தான் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்தும் பலன் கிடைக்கவில்லை என்பதை அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். இருப்பினும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தில் சிவராஜ்குமார் நடித்தது போன்ற முன்னுதாரணங்கள் ஆரோக்கியமானவை என்று அவர் பாராட்டியுள்ளார்.
சுதீப் தான் நடித்த பிற மொழிப் படங்களை ஒருபோதும் பணத்திற்காக அணுகியதில்லை. "நான் சல்மான் பாய்க்காக 'தபாங் 3' படத்தில் நடித்தேன், அதற்காக ஒரு பைசா கூட வாங்கவில்லை. அது முழுக்க முழுக்க நட்புக்காகச் செய்தது," என்று அவர் கூறியுள்ளார். அதேபோல், தமிழில் விஜய் நடித்த 'புலி' படத்தில் நடித்தது குறித்தும் பேசியுள்ளார். "தளபதி விஜய் யாரைப் பற்றியும் ஒருபோதும் தவறாகப் பேசமாட்டார், அந்தப் பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும்," என விஜய்யின் நேர்மறையான அணுகுமுறையைப் புகழ்ந்துள்ளார். அதே சமயம், எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'ஈகா' (நான் ஈ) படத்தில் நானி நடித்த விதம் தன்னை மிகவும் கவர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.
திரையுலகில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நட்சத்திரங்கள் மங்கிவிடுவது இயல்பு. ஆனால், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் மற்றும் கிளின்ட் ஈஸ்ட்வுட் ஆகியோர் இதில் விதிவிலக்கு என்கிறார் சுதீப். "இவர்களுக்கு வயது ஒரு தடையே இல்லை. உலகிலேயே ஒரு சிலரால் மட்டுமே வாழ்நாள் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட முடியும். மற்றவர்கள் காலம் செல்லச் செல்ல மங்கிவிடுகிறார்கள்," என மூத்த கலைஞர்களுக்குத் தனது மரியாதையைச் செலுத்தியுள்ளார்.
விளையாட்டுத் துறையில் விராட் கோலியைத் தனக்குப் பிடிப்பதற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார். "கோலியின் ஆக்ரோஷமே அவரது அடையாளம். மிகுந்த தன்னம்பிக்கை உள்ள ஒருவரால் மட்டுமே தன்னை அப்படி வெளிப்படுத்திக்கொள்ள முடியும்," என்று கோலியின் குணாதிசயத்தைப் பாராட்டியுள்ளார்.
தனது தந்தை ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக இருந்தாலும், 10-ஆம் வகுப்பிற்குப் பிறகு அவரிடமிருந்து பணம் பெறுவதை சுதீப் நிறுத்திவிட்டார். சினிமா வாய்ப்புகளுக்காகக் காத்திருந்த காலங்களில் விற்பனையாளராகவும், கிடங்கு ஊழியராகவும் பணியாற்றியுள்ளார். கிரிக்கெட் விளையாடிப் பரிசுத் தொகை வென்றே தனது தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொண்டதாகத் தனது ஆரம்பக்கால போராட்டங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
