1. Home
  2. சினிமா செய்திகள்

அஞ்சான் தோல்வியால் 3 மாதங்கள் கஷ்டப்பட்டேன்.. லிங்குசாமியின் பேட்டி!

lingusamy-anjaan
வெற்றிப்பட இயக்குநர் லிங்குசாமி, சூர்யாவை வைத்து இயக்கிய 'அஞ்சான்'படத்தின் தோல்வியால் சந்தித்த மோசமான அனுபவத்தைப் பற்றியும், தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் ரீ ரிலீஸ் குறித்த தனது நம்பிக்கையையும் ஒரு பிரத்யேக பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

லிங்குசாமியின் சினிமா பயணம்

இயக்குநர் லிங்குசாமி, தனது முதல் படமான 'ஆனந்தம்' மூலம் குடும்பப் படங்களை இயக்குவதில் கவனம் பெற்றார். அதைத் தொடர்ந்து, 'ரன்' மற்றும் 'சண்டக்கோழி' போன்ற கமர்ஷியல் பிளாக்பஸ்டர் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

குறிப்பாக, 'ரன்' படம் நடிகர் மாதவனை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக மாற்றியது; அதேபோல் விஷாலுக்கும் 'சண்டக்கோழி' பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. இந்த வெற்றிப் பயணம் 'ஜி' படத்தில் ஒரு சிறிய சறுக்கலைச் சந்தித்தாலும், அதன் உச்சபட்ச தோல்வியை 'அஞ்சான்' திரைப்படம் ஏற்படுத்தியது.

மொத்த வித்தையையும் இறக்கினேன்

'அஞ்சான்' பட ரிலீஸுக்கு முன்பு லிங்குசாமி, "கத்துக்குட்ட மொத்த வித்தையையும் இதில் இறக்கியிருக்கேன்" என்று கொடுத்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. சூர்யாவின் மாஸான கெட்டப்பும் கூடுதல் எதிர்பார்ப்பை தூண்டியது.

இருப்பினும், படம் ரசிகர்களுக்கு முழு திருப்தியை அளிக்காததால், அந்த ஏமாற்றத்தையும், கோபத்தையும் அவர்கள் லிங்குசாமி மீது கொட்டித் தீர்த்தனர். சமூக ஊடகங்கள் வளர்ந்து வந்த அந்தக் காலகட்டத்தில், விமர்சனங்களும் கேலிகளும் எல்லை மீறி அவரைத் தாக்கின. அந்த மோசமான அனுபவத்தை அவர் இன்றும் மறக்கவில்லை.

அஞ்சான் புதுப் பரிமாணம்

தற்போது, 'அஞ்சான்' படம் நாளை ரீ ரிலீஸாக உள்ளது. முதலில் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் இருந்த இந்தப் படம், இப்போது 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தில் இருந்த நடிகர் சூரியின் போர்ஷன்களும் நீக்கப்பட்டுள்ளன. இந்த எடிட்டிங் மாற்றங்கள் மூலம், இம்முறை படம் கண்டிப்பாக நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை லிங்குசாமிக்கு இருப்பதாகத் தெரிகிறது.

 முதல் அடியை வாங்கியவர் நான்

ஃபில்மிபீட் தமிழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், லிங்குசாமி முக்கியமான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார். தொடர் வெற்றிகள் சிலருக்குப் பொறாமையையும் கோபத்தையும் ஏற்படுத்தும் என்றும், அதன் வெளிப்பாடு சோஷியல் மீடியாவில் விமர்சனங்களாக வெளிவந்தது என்றும் கூறினார்.

"அப்படி எல்லோரும் பேசியதில் நாம் தான் ஃபர்ஸ்ட்" என்று கூறிய அவர், சமூக ஊடகங்கள் வளர்ந்து வந்த அந்த நேரத்தில் அஞ்சான் தோல்வியால் தான் வாங்கிய அடி மிகவும் வலிமையானது என்றும் குறிப்பிட்டார்.

மூன்று மாதங்கள் பாதிப்பு

அஞ்சான் படத் தோல்வி மற்றும் அதைத் தொடர்ந்து வந்த கடுமையான விமர்சனங்கள் தன்னை மூன்று மாதங்கள் மிகவும் பாதித்ததாக லிங்குசாமி வெளிப்படையாகத் தெரிவித்தார். இருப்பினும், தனது குடும்பம், குருநாதர் மற்றும் நண்பர்களின் ஆதரவால் மட்டுமே தான் அதிலிருந்து மீண்டு வந்து சினிமாவில் தொடர்ந்து நிற்க முடிந்தது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

சூர்யாவுக்காகவும் ரசிகர்களுக்காகவும் இந்த ரீ-ரிலீஸ்

"படம் வெளியாகி பத்து வருடங்கள் ஆகிவிட்டன. இந்த பத்து வருடங்களில் நிறைய பேர் என்னிடம், 'எனக்கு அஞ்சான் படம் பிடிக்கும்' என்று சொல்லியிருக்கிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டார். அதேபோல், சூர்யாவின் ரசிகர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் படம் கனெக்ட் ஆகியிருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், கேரளா மற்றும் மும்பையில் படம் நன்றாக ஓடியது என்றும், இந்த ரீ-ரிலீஸ் தங்கள் சந்தோஷத்திற்காகவும், சூர்யா மீதுள்ள மரியாதைக்காகவும், சூர்யாவின் ரசிகர்களுக்காகவும்தான் என்றும் லிங்குசாமி தெளிவுபடுத்தினார்.

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.