திரையைக் கலக்க வரும் இரு சகாப்தங்கள்! ரஜினியுடன் இணையும் மெகா ஸ்டார்
சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் இயக்குனர் பாபி, ரஜினியை 30 நிமிட 'பவர்ஃபுல்' சிறப்பு வேடத்தில் நடிக்க வைக்க முயற்சிக்கிறார்.
சிரஞ்சீவி ரஜினி காம்போ உருவாகும் வாய்ப்பு அதிகரிப்பு.
ரஜினியின் அடுத்தடுத்த முக்கிய படங்கள்
ரஜினிகாந்தின் அடுத்தப் பட வரிசையில், தற்போது பிரமாண்டமாக 'ஜெயிலர் 2' படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை முடித்த பின்னர், அவர் தனது நண்பரான கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை ஆரம்பத்தில் சுந்தர் சி இயக்குவதாக இருந்தது, ஆனால் அவர் விலகியதால், 'பார்க்கிங்' பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகப் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிறந்தநாள் அறிவிப்பிற்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்
கமல்ஹாசனின் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள இந்த புதிய படம் குறித்த அறிவிப்பு, வருகிற டிசம்பர் மாதம் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. சிரஞ்சீவி மற்றும் கமல் ஹாசன் ஆகியோருடன் ரஜினி இணையும் இந்த அடுத்தடுத்தப் படத் திட்டங்கள், அவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெறும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.
சிரஞ்சீவியின் படத்தில் ரஜினியின் 'பவர்ஃபுல்' சிறப்புத் தோற்றம்
தென்னிந்திய சினிமாவின் சகாப்தங்களாகத் திகழும் மெகாஸ்டார் சிரஞ்சீவி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் எந்தவிதப் சினிமாப் பின்புலமும் இன்றி, தங்கள் கடின உழைப்பால் உச்சத்தைத் தொட்டவர்கள். இந்த இரு பெரும் ஜாம்பவான்கள் இணைந்து நடிக்கும் ஒரு திரைப்படத்தை காண ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் ஓய்வு பெறும் வதந்திகளுக்கு மத்தியில், அவரது அடுத்தடுத்த படத் திட்டங்களில் தற்போது சில சுவாரஸ்யமான மற்றும் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறப்பு கதாபாத்திரத்தில் ரஜினி
ரஜினியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த மெகா காம்போ தற்போது கைகூடும் நிலையில் உள்ளது. சிரஞ்சீவி தற்போது இயக்குனர் பாபி (K.S. Ravindra) இயக்கத்தில் ஒரு புதிய படத்திற்கு கமிட் ஆகியுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த்தை ஒரு சக்திவாய்ந்த சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றனவாம். இயக்குனர் பாபி, ரஜினிக்காக சுமார் 30 நிமிடங்கள் ஓடக்கூடிய, கதையின் போக்கையே மாற்றியமைக்கும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வணிக ரீதியான சவால்
சமீபத்தில் வெளியான 'கூலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், ஒரு பெரிய வெற்றி ரஜினிகாந்திற்கு இன்றியமையாததாகிறது. இந்த நேரத்தில் அவரது முழு நம்பிக்கையும் தற்போது 'ஜெயிலர் 2' படத்தின் மீது உள்ளது. சிரஞ்சீவி - ரஜினி இணையும் இந்தப் புதிய படத்தில், பாபி போன்ற ஒரு கமர்ஷியல் இயக்குனர் இரண்டு சூப்பர்ஸ்டார்களையும் சமமாக சித்தரித்து, படத்தின் கதையை எப்படி சமநிலைப்படுத்துவார் என்ற சவால் உள்ளது. இந்தப் பிரம்மாண்டமான கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
