சிரஞ்சீவிக்காக ரூல்ஸை மாற்றிய நயன்.. கோலிவுட்டில் வெடித்த சர்ச்சை!
பொதுவாகத் தனது படங்களின் ப்ரோமோஷன்களில் கலந்து கொள்ளாத நயன்தாரா, தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துள்ள மன சங்கர் வரபிரசாத் காரு படத்திற்காகத் தானாக முன்வந்து ப்ரோமோஷன் செய்திருப்பது தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, பொதுவாக தான் நடிக்கும் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்ப்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருப்பார். ஒப்பந்தம் போடும்போதே இதைக் கண்டிஷனாக சொல்லிவிடுவார் என்பது கோலிவுட்டில் நீண்ட நாள் பேச்சாகும். ஆனால், தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்காக அவர் செய்துள்ள ஒரு செயல், தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் 2026 சங்கராந்தி (பொங்கல்) பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு திரையுலகில் பெரும் நட்சத்திரப் போர் நிலவுகிறது. ஜனவரி 9-ம் தேதி பிரபாஸின் பிரம்மாண்ட படமான தி ராஜாசாப் வெளியாகிறது. அதற்குப் போட்டியாக ஜனவரி 12-ம் தேதி சிரஞ்சீவி நடிப்பில், அனில் ரவிப்புடி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மன சங்கர் வரபிரசாத் காரு' வெளியாகிறது.
சிரஞ்சீவியின் சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், இந்தப் படம் அவருக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில், இயக்குனர் அனில் ரவிப்புடியின் வேண்டுகோளுக்கு இணங்க, நயன்தாரா இந்தப் படத்திற்காக ஒரு பிரத்யேக ப்ரோமோஷன் வீடியோவில் தோன்றியுள்ளார். "நயன்தாராவே ப்ரோமோஷன் பண்ணலையா?" என்ற தொனியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, டோலிவுட் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
நயன்தாராவின் இந்தத் திடீர் மாற்றம் தமிழ் தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும்போது கூட ஆடியோ லான்ச் அல்லது ப்ரோமோஷன் பேட்டிகளில் பங்கேற்காத நயன்தாரா, தனது சொந்தத் தயாரிப்பு அல்லது மிக நெருங்கிய நண்பர்களின் படங்களுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிப்பார்.
இந்த பொங்கலுக்கு தமிழில் விஜய்யின் 'ஜன நாயகன்' மற்றும் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' போன்ற பெரிய படங்கள் வெளியாகின்றன. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பேரரசை உருவாக்கி வைத்திருக்கும் நயன்தாரா, இங்குள்ள படங்களுக்குக் காட்டாத ஆர்வத்தை தெலுங்கு படத்திற்கு 'வான்டட்டாக' காட்டுவது ஏன்? என கோலிவுட் வட்டாரத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.
இயக்குனர் அனில் ரவிப்புடி ஏற்கனவே பகவந்த் கேசரி போன்ற பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்தவர் என்பதால், அவர் மீதான நம்பிக்கையில் நயன்தாரா இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், பிரபாஸின் 'தி ராஜாசாப்' படத்திற்கு இருக்கும் மாபெரும் ஹைப்-ஐ முறியடிக்க சிரஞ்சீவி அணி நயன்தாராவை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
