பராசக்தி மேடையில் குமுறிய ரவி.. ஆர்த்தியை மறைமுகமாக சீண்டினாரா?
பராசக்தி பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரவி மோகன் பேசிய சுயமரியாதை குறித்த கருத்துக்கள், அவரது விவாகரத்து சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளது.
ஜெயம் ரவி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ரவி மோகன், தற்போது தனது திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் அவர் நடித்த 'காதலிக்க நேரமில்லை' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது முற்றிலும் மாறுபட்ட களங்களில் 'ப்ரோ கோட்', 'ஜீனி', மற்றும் 'கராத்தே பாபு' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இருப்பினும், தற்போது ஒட்டுமொத்த திரையுலகின் பார்வையும் அவர் வில்லனாக அவதாரம் எடுத்துள்ள 'பராசக்தி' படத்தின் மேல் விழுந்துள்ளது. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை, 'சூரரைப் போற்று' புகழ் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். வரும் ஜனவரி 10-ம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ள இப்படத்தில், 'திருநாடன்' என்ற பவர்ஃபுல்லான வில்லன் கதாபாத்திரத்தில் ரவி நடித்துள்ளார்.
ஒரு ஹீரோவாக இருந்துவிட்டு, திடீரென வில்லனாக மாறியிருப்பது அவரது துணிச்சலான முடிவாகப் பார்க்கப்படுகிறது. நேற்று சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் பிரமாண்ட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரவி பேசிய பேச்சுதான் இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்.
மேடையில் பேசிய அவர், "நான் இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்ததற்கு மிக முக்கியமான காரணம் இதிலுள்ள 'சுயமரியாதை' என்ற அம்சம் தான். என் நிஜ வாழ்க்கையிலும் எனது சுயமரியாதையை மீட்டெடுக்க நான் கடுமையாகப் போராடினேன். எதை இழந்தாலும் உங்கள் சுயமரியாதையை மட்டும் யாரிடமும் விட்டுக்கொடுக்காதீர்கள்," என உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
ரவியின் இந்தப் பேச்சு, சில மாதங்களுக்கு முன்பு அவர் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தபோது வெளியிட்ட அறிக்கையை அனைவருக்குமே நினைவூட்டியுள்ளது. அப்போது, "வீட்டு வேலைக்காரர்களுக்கு கொடுக்கும் மரியாதையைக் கூட எனக்கு ஆர்த்தி தரப்பினர் தரவில்லை" என்று அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
தற்போது 'பராசக்தி' படத்தின் கருப்பொருளைத் தனது சொந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பேசியிருப்பது, அவர் இன்னும் அந்த கசப்பான அனுபவங்களில் இருந்து மீளவில்லை என்பதையும், மறைமுகமாக ஆர்த்தியைத் தான் அவர் தாக்கிப் பேசுகிறார் என்பதையும் உறுதிப்படுத்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'திருநாடன்' கதாபாத்திரம் அவருக்கு ஒரு புதிய அடையாளத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நிஜ வாழ்க்கைப் போராட்டங்களும் அவரைச் சுற்றியே வலம் வருகின்றன.
