ஜனநாயகனை ஓரம்கட்டிய பராசக்தி.. மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்
2026 பொங்கல் ரேசில் விஜய்யின் 'ஜனநாயகன்' மற்றும் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படங்கள் நேருக்கு நேர் மோதுகின்றன. புக்மைஷோ ஆர்வம் மற்றும் ரிலீஸ் தேதி மாற்றத்தால் கோலிவுட்டில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தமிழ் திரையுலகில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை என்பது சாதாரணமான ஒன்றாக இருக்கப்போவதில்லை. கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் மற்றும் வசூல் மன்னனாக உருவெடுத்துள்ள சிவகார்த்திகேயன் ஆகிய இருவரின் படங்களும் ஒரே வாரத்தில் மோதவிருப்பது தற்போதே இணையதளங்களை சூடாக்கியுள்ளது.
முதலில் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம், தற்போது அதிரடியாக ஜனவரி 10-ம் தேதியே திரைக்கு வரும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளே சிவகார்த்திகேயன் களமிறங்குவது திரையரங்க ஒதுக்கீட்டில் பெரும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மோதலில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், முன்னணி டிக்கெட் முன்பதிவு தளமான புக்மைஷோவில் (BookMyShow) நிலவும் ட்ரெண்ட் தான். தற்போது வரை 'ஜனநாயகன்' படத்தைக் காட்டிலும், சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தைப் பார்க்க ஆர்வமாக இருப்பதாக அதிகப்படியான ரசிகர்கள் வாக்களித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான 'அமரன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றி, சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளதே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
விஜய் அரசியலுக்குச் செல்வதற்கு முன் நடிக்கும் படங்களில் ஒன்று என்பதால் 'ஜனநாயகன்' படத்திற்குப் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேசமயம், குடும்ப ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள சிவகார்த்திகேயன், தனது 'பராசக்தி' மூலம் தரமான போட்டியைத் தருவார் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் உள்ள சுமார் 1100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளைப் பிரிப்பதில் இரு படங்களின் விநியோகஸ்தர்களுக்கும் இடையே கடும் சவால்கள் நிலவக்கூடும். இந்த பொங்கல் ரேசில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் எந்தப் படம் முந்தப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ரசிகர்களுக்கோ இது இரட்டை விருந்தாக அமையப்போவது உறுதி.
