வட்டி வேட்டையில் தாய் கிழவி! ராதிகா காட்டும் பயமுறுத்தும் அவதாரம்
சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா சரத்குமார் 'தாய் கிழவி'யாக நடித்துள்ள இந்தப் படம், வட்டி வசூல் செய்யும் ஒரு கிராமத்துப் பாட்டியின் அதிரடி வாழ்க்கையைப் பேசுகிறது. நகைச்சுவை மற்றும் கிராமத்து எதார்த்தம் கலந்த இந்தப் படம், ராதிகாவின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் எனத் தெரிகிறது.
நடிகை ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக, ஒரு மிரட்டலான பாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'தாய் கிழவி'. சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஒரு கிராமத்தையே தனது விரல் நுனியில் வைத்திருக்கும் அதிகாரம் படைத்த பாட்டியாக ராதிகா நடித்துள்ளார். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் இவரைக் கண்டாலே, அந்த ஊர் ஆண்கள் அஞ்சி நடுங்குகின்றனர். வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் ஏமாற்றுபவர்களை ராதிகா எப்படித் துரத்திப் பிடிக்கிறார் என்பதும், "இவருக்குச் சாவே வராதா?" என்று ஊர் மக்கள் சாபம் விடும் அளவிற்கு அவர் செய்யும் அதிரடிகளுமே இப்படத்தின் மையக்கரு. கிராமத்து பின்னணியில் நகைச்சுவை மற்றும் எதார்த்தம் கலந்த வாழ்வியலாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்த சமூக மையமான கதையை இயக்குநர் சிவகுமார் முருகேசன் கிராமத்து அரசியல், பயம், அதிகாரம், மனித மனநிலைகள் ஆகியவற்றுடன் சேர்த்து சொல்ல முயற்சித்துள்ளார்.
இந்த படத்தை சிவகார்த்திகேயன் தனது SK Productions நிறுவனத்தின் கீழ் தயாரித்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை டீசரிலேயே கதையின் பதற்றத்தை உயர்த்துகிறது. ராதிகாவுடன் சிங்கம் புலி, அருள் தாஸ், பால சரவணன், முனீஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியான், முத்துகுமார், ராய்ச்சல் ரெபெகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
டீசரில் வெளிப்படும் கிராமத்து சூழல், ராதிகாவின் மிரட்டலான வசனங்கள் மற்றும் வித்தியாசமான கேரக்டர் டிசைன் ஆகியவை, ‘தாய் கிழவி’ ஒரு ரொட்டீன் கிராமத்து படமாக இல்லாமல், கனமான கதையுடன் வரும் படம் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு ராதிகா ஒரு வலிமையான, சவாலான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அவரது உடல்மொழியும், வசன உச்சரிப்பும் டீசரில் மிரட்டலாக உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்கள் பட்டாளமே இருப்பதால், படம் முழுக்க சிரிப்பிற்குப் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.
கிராமத்து வட்டித் தொழில் மற்றும் அங்கிருக்கும் மனிதர்களின் மனநிலையை எதார்த்தமாகப் பதிவு செய்திருப்பது படத்தின் பிளஸ் பாயிண்ட். கிராமத்து வட்டி வசூல் பாட்டி என்பது நாம் ஏற்கனவே சில படங்களில் பார்த்த ஒன்று என்பதால், திரைக்கதையில் புதுமை இருந்தால் மட்டுமே அது ரசிகர்களை முழுமையாகக் கவரும்
