ரஜினி, கமல் இணையும் படத்தின் தற்போதைய நிலை?

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் எப்போதுமே ஒரு கனவு இருந்தது- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன் ஒரே படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்பது. இருவரும் இந்திய சினிமாவின் பெரும் முகங்கள். ஒரு காலத்தில் ஒரே ஸ்டூடியோவில் இருந்து வளர்ந்து, பின் தனித்தனியாக நடித்து புகழ் பெற்றனர். ஆனால், இந்த இரண்டு பேரும் மீண்டும் ஒரே திரையில் சேர்வது குறித்து கடந்த சில மாதங்களாக சினிமா வட்டாரங்களில் பரபரப்பான செய்தி ஒன்று பரவி வருகிறது. அதுதான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, கமல் இணையும் பெரிய படம்.
லோகேஷ் கனகராஜ் இன்று தமிழ் சினிமாவின் பெரிய டைரக்டராக உயர்ந்துள்ளார். “மாஸ்டர்”, “விக்ரம்”, “லியோ”, கூலி போன்ற ஹிட் படங்கள் மூலம் அவர் உருவாக்கிய LCU (Lokesh Cinematic Universe) ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. “விக்ரம்” படத்தின் மூலம் கமல் ஹாசனை இன்றைய ரசிகர்களுக்கு மீண்டும் வேறு விதமாக காட்டினார். அதனால் லோகேஷ், ரஜினி, கமல் இந்த மூவரும் சேர்ந்து ஒரு படம் எடுத்தால் அது இந்திய பெரிய படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கதை இன்னும் உருவாக்கப்படவில்லை
ஆனால் சமீபத்திய தகவல்படி, இந்த ரஜினி, கமல் கூட்டணிப் படத்திற்கான கதை இன்னும் உருவாக்கப்படவில்லை. “லோகேஷ் தற்போது எந்த ஸ்கிரிப்டையும் ரெடி செய்யவில்லை. ரஜினி மற்றும் கமல் இணையும் ப்ராஜெக்ட் இன்னும் டிஸ்கஷன் லெவலில் மட்டுமே உள்ளது”. இதனால் ரசிகர்களிடையே சிறிய ஏமாற்றம் ஏற்பட்டிருந்தாலும், அவர்கள் நம்பிக்கையை விடவில்லை. ஏனெனில் லோகேஷ் கங்கராஜ் தனது கனவுப் படங்களில் ஒன்றாக இதை திட்டமிட்டிருக்கிறார் என்பதும் உண்மை.
கமல்ஹாசன்- ரஜினிகாந்த் இருவரும் கடைசியாக ஒரே படத்தில் நடித்தது 1980களில் தான். அதன்பிறகு இருவரும் தனித்தனியாக வெவ்வேறு பாதையில் சென்று, தமிழ் சினிமாவின் வெவ்வேறு முகங்களாக மாறினர். ரஜினி பாக்ஸ் ஆபீஸில் மாஸ் ஹீரோவாக உயர்ந்தார்; கமல் ஹாசன் கலைநயம் மற்றும் கதையின் ஆழத்தால் ரசிகர்களை கவர்ந்தார். இவர்கள் ஒரே திரையில் மீண்டும் இணைந்தால், அது பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் இருக்கும்.
இந்நிலையில் ரஜினிகாந்த் தற்போது “ஜெயிலர் 2” படத்துக்கான முழுமுயற்சியில் இருக்கிறார். “ஜெயிலர்” படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, சன் பிக்சர்ஸ் இதன் தொடர்ச்சியை மிகுந்த எதிர்பார்ப்புடன் நடந்து வருகிறது. இதற்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் வேறு இயக்குநர் ஒருவரின் கதை எனும் தகவலும் வெளிவந்துள்ளது. அதாவது “ஜெயிலர் 2”க்கு பிறகு அவர் லோகேஷ் படத்தில் அல்ல, வேறு இயக்குநருடன் இணைவார். இதனால் லோகேஷ், ரஜினி, கமல் கூட்டணி உருவாகும் படம் இன்னும் தாமதமாகும்.
திரையுலகத்தில் இவ்வாறான பெரிய கூட்டணிகள் உருவாகும் முன் பல கட்டங்கள் கடக்க வேண்டும். ஸ்கிரிப்ட், தேதிகள், தயாரிப்பு நிறுவனம், கமிட்மெண்ட் போன்றவை அனைத்தும் ஒரே நேரத்தில் பொருந்த வேண்டும். தற்போது லோகேஷ் கங்கராஜ் தனது அடுத்த சோலோ ப்ராஜெக்டில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், கமல் ஹாசன் “KH233” போன்ற படங்களில் பிஸியாக உள்ளார்.

