தளபதியிடம் ஓப்பனாக கேட்ட SK.. பொங்கல் ரேஸில் நடந்தது என்ன?
விஜய்யின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், இது குறித்து சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ள சுவாரசியமான பின்னணித் தகவல்கள் வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகில் பொங்கல் பண்டிகை என்றாலே பெரிய ஹீரோக்களின் படங்கள் மோதுவது வழக்கம். அந்த வகையில், 2026 பொங்கல் ரிலீஸ் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முதலில் தீபாவளி ரிலீஸாகத் திட்டமிடப்பட்ட சிவகார்த்திகேயனின் பராசக்தி, சில காரணங்களால் பொங்கலுக்கு மாற்றப்பட்டது. அதே சமயம், தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படமும் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டவுடன், சிவகார்த்திகேயன் சற்று தயக்கமடைந்துள்ளார்.
இது குறித்து மேடையில் பேசிய அவர், "முதலில் அக்டோபர் தீபாவளிக்குத் தான் பிளான் செய்தோம். ஆனால் விஜய் சார் படம் லாக் ஆனதால், நாங்கள் பொங்கலுக்கு மாறினோம். எதிர்பாராத விதமாக ஜனநாயகன் படமும் பொங்கலுக்கு தள்ளிப்போனது. விஜய் சாரோட கடைசி படம் என்பதால், ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்வது சரியாக இருக்குமா என எனக்குள் ஒரு உறுத்தல் இருந்தது," என்று ஓப்பனாகப் பேசினார்.
தன் தயக்கத்தை போக்க, விஜய் சாரை அணுகிய சிவகார்த்திகேயனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷிடம் இது குறித்து பேசியபோது, அவர் விஜய்யிடம் கலந்தாலோசித்துள்ளார். வெறும் ஐந்தே நிமிடத்தில் பதிலளித்த விஜய், "அதெல்லாம் ஒன்னும் இல்ல, சூப்பரா பொங்கலுக்கு வரட்டும். என் வாழ்த்துகளை SK-விடம் சொல்லுங்கள்" எனக் கூறி பெருந்தன்மையாக அனுமதியளித்துள்ளார்.
விஜய்யின் இந்த அன்பான அணுகுமுறை சிவகார்த்திகேயனை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 33 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த ஒரு மாபெரும் கலைஞனின் கடைசி படம் ரிலீஸாகும் போது, அவருடன் திரையரங்குகளைப் பகிர்ந்து கொள்வதை சிவகார்த்திகேயன் கௌரவமாகக் கருதுகிறார்.
இந்த பொங்கல் போட்டியை ஒரு மோதலாகப் பார்க்காமல், கொண்டாட்டமாக மாற்ற சிவகார்த்திகேயன் அழைப்பு விடுத்துள்ளார். "ஜனவரி 9-ம் தேதி விஜய் சாரோட 'ஜனநாயகன்' படத்தை செலிப்ரேட் பண்ணுங்க, அடுத்த நாள் ஜனவரி 10-ம் தேதி 'பராசக்தி' பார்த்து ஆதரவு கொடுங்க," என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதாக வெளியாகும் கடைசி படம் என்பதால் 'ஜனநாயகன்' மீதும், சிவகார்த்திகேயனின் வளர்ந்து வரும் மார்க்கெட் காரணமாக 'பராசக்தி' மீதும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
