ஜனநாயகனுக்கு முன் நிற்கும் 6 படங்கள்.. வசூல் கணக்கில் ரிஸ்க் அதிகமா?
இந்த ஆண்டு ஜனவரி பண்டிகை காலம் தென்னிந்திய திரைப்படத் துறைக்கு மிகப்பெரிய வணிகப்போராட்டமாக மாறியிருக்கிறது. பல துறைகளில் இருந்து பல ஜானர்களில் வரும் படங்கள் வெளியீட்டை நிலைநிறுத்தியுள்ளதால், ரசிகர்கள் பல்வேறு வகை திரைப்படங்களை அனுபவிக்க ஒரு சிறந்த சூழல் உருவாகியுள்ளது.
குளிர்கால பண்டிகை காலமான ஜனவரி பொதுவாகவே தமிழ், தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களுக்கு மிக முக்கியமான சீசன். இந்த ஆண்டும் அதே வேகத்தில் பாக்ஸ் ஆபிஸ் ரேஸ் உருவாகியுள்ளது. குறிப்பாக, வினோத் - விஜய் கூட்டணியின் ‘ஜனநாயகன்’ பான் இந்தியா ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைச் சுற்றி பல பெரிய படங்கள் வெளியீட்டை லாக் செய்ததால், பண்டிகை காலத்தில் போட்டி மிகுந்த சூழல் உருவாகியுள்ளது.
வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், நடிகர் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஜனநாயகன்’ வரும் ஜனவரி 5ம் தேதி வெளியாகிறது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரபல நட்சத்திரங்களின் வலுவான பட்டியல், அதிரடி அரசியல் பின்னணி கொண்ட கதையமைப்பு ஆகியவை இப்படத்திற்கான எதிர்பார்ப்பை உயர்த்துகின்றன. இப்படம் தமிழுடன் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா அளவில் வெளியானதால், இது திரையரங்குகளில் மிகப்பெரிய ஓப்பனிங் பெறும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இணையும் ‘பராசக்தி’ ஜனவரி 14 அன்று வெளியாக உள்ளது. ரவி மோகன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் முன்பு ‘சூரரைப் போற்று’ வெளியானதை நினைத்தாலே, இந்த படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகம். பண்டிகை நாளான ஜனவரி 14 வெளியீடு என்பதால், குடும்ப ரசிகர்கள் அதிகமாக திரையரங்குகளில் வருவார்கள். ஆனால் அதே நாளில் தெலுங்கில் வெளியிடப்படும் மற்ற படங்களும் போட்டியாக இருக்கலாம்.
மாருதி இயக்கத்தில் மிக நீண்ட காலம் தயாராகிக் கொண்டிருந்த பிரபாஸ் , சஞ்சய் தத், நிதி அகர்வால் நடிப்பில் உருவாகிய ‘தி ராஜா சாப்’ ஜனவரி 9ம் தேதி வெளியாக இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் நவீன் பாலிஷெட்டி, மீனாட்சி சவுத்ரி நடிக்கும் ‘அனகனகா ஓகா ராஜு’ ஜனவரி 14 அன்று வெளியாகிறது. நவீன் பாலிஷெட்டி முன்னணி காமெடிஃபேமிலி ஹீரோவாக உருவெடுத்துள்ளதால், இந்தப் படம் தெலுங்கு குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் வாய்ப்பு உள்ளது.
ராம் அப்பாராஜு இயக்கத்தில் ஷர்வானந்த், சாக்ஷி வைத்யா, சம்யுக்தா நடிக்கும் ‘நாரி நரி நடும முராரி’ கூட பண்டிகை வாரம் ரிலீஸாகிறது. ஃபேமிலி என்டர்டெய்னர் ஜானர், ஷர்வானந்த் மார்க்கெட்டில் நல்ல ஆதரவு, பண்டிகை காலத்தை குறிவைத்த செட்டிங் இந்த படம், வணிக ரீதியாக உறுதியான ஓப்பனிங் பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் பிரபாஸ் படத்தின் தாக்கம் காரணமாக இதன் ஆரம்ப வசூல் பாதிக்கப்படலாம்.
சிரஞ்சீவி, நயன்தாரா நடிக்கும் ‘மன ஷங்கர வர பிரசாத் காரு’ பண்டிகை காலத்துக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. சிரஞ்சீவி படங்கள் எப்போதும் பண்டிகை காலத்தைக் குறிவைத்தே வரும் என்பதால், இது வெளியாகும் நாள் எந்தப் படத்தின் கலெக்ஷனையும் தள்ளி விடக்கூடிய வலிமை கொண்டதாக இருக்கும்.
ரவி தேஜா நடிக்கும் பர்தா மஹாசாயுலகு விக்ஞாபதி வெளியாக உள்ளது. மாஸ் என்டர்டெயினர் என்ற ரிப்போர்டுகளுடன் வரும் இந்த படம், தெலுங்கு மாநிலங்களில் ஒரு நல்ல வணிகத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்படம் ‘அனகனகா ஓகா ராஜு’ மற்றும் ‘நாரி நரி நடும முராரி’ உடன் நேரடி போட்டியாக இருக்கும்.
