சிறு பட்ஜெட் படங்களின் கேப்டன்.. தமிழ் சினிமாவின் நம்பிக்கையாக மாறும் சிவகார்த்திகேயன்!
தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராகத் திகழ்வது மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் புதிய திறமையாளர்களை ஊக்குவிப்பதில் சிவகார்த்திகேயன் எப்படி ஒரு தனிப்பாதையை உருவாக்கி வருகிறார்.
வெறும் திரையில் தோன்றும் ஹீரோவாக மட்டும் இல்லாமல், சினிமாவின் எதிர்காலத்தைத் தாங்கிப் பிடிக்கும் ஒரு தூணாக உருவெடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு பெரிய நடிகர், சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஆதரவு கொடுப்பது வழக்கம். அந்த வரிசையில், இன்றைய சூழலில் சின்ன பட்ஜெட் படங்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக 'எஸ்கே' (SK) திகழ்கிறார்.
நடிகராக சிவகார்த்திகேயன் தனது பாணியை மெல்ல மாற்றி வருகிறார். ஆரம்பத்தில் கமர்ஷியல் ஹீரோவாக அறியப்பட்டவர், தற்போது 'மாவீரன்', 'அமரன்' எனத் தனது நடிப்புத் திறமைக்கும் கதைக்கும் முக்கியத்துவம் உள்ள களங்களைத் தேர்ந்தெடுக்கிறார். அதே சமயம், அவரது தயாரிப்பு நிறுவனமான 'சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்' (SK Productions) முழுக்க முழுக்கப் புதிய முயற்சிகளுக்கான ஒரு ஆய்வுக்கூடமாகவே செயல்படுகிறது.
ஒரு முன்னணி நடிகர் தன் தயாரிப்பில் பிரம்மாண்டமான படங்களை மட்டுமே எடுப்பார் என்ற பிம்பத்தை அவர் உடைத்துள்ளார். கனா பெண்களின் கிரிக்கெட் கனவைப் பேசியது. வாழ் & குரங்கு பெடல் வாழ்வியலை மிகத் துல்லியமாகப் பதிவு செய்தன. கொட்டுக்காளி சர்வதேசத் திரைப்பட விழாக்களில் தமிழ் சினிமாவின் பெருமையை உரக்கச் சொன்னது.
இந்த ஆண்டு வெளியான 'ஹவுஸ்மேட்ஸ்' திரைப்படம் வரை, அவர் கரம் நீட்டும் ஒவ்வொரு படமும் அதன் கருப்பொருளில் தனித்துவமாக இருக்கிறது. லாபத்தை விட, ஒரு தரமான படைப்பு சினிமா வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் மிக முக்கியமான குணம், சக கலைஞர்களைக் கொண்டாடுவது. ஒரு சிறு பட்ஜெட் படம் திரையரங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றாலோ அல்லது தரமான விமர்சனங்களைச் சந்தித்தாலோ, உடனே அந்தப் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டுவதைத் தனது கடமையாகவே கொண்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் இதற்காகப் பல விமர்சனங்கள் வந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் மற்றவர்களின் உழைப்பை அங்கீகரிப்பதில் அவர் காட்டும் ஆர்வம் வியக்கத்தக்கது.
சினிமா என்பது வெறும் வியாபாரம் மட்டுமல்ல, அது பலரது கனவு என்பதை உணர்ந்த ஒரு கலைஞனாகச் சிவகார்த்திகேயன் இன்று பல இளைஞர்களுக்கு ஏணியாக இருந்து வருகிறார். இந்தத் துணிச்சலும், மற்றவர்களை வளர்க்கும் குணமுமே அவரை ஒரு 'மாஸ்' ஹீரோ என்பதையும் தாண்டி ஒரு சிறந்த மனிதராக ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கச் செய்துள்ளது.
