ஒரிஜினல் தான் முக்கியம்.. ஜனநாயகனுக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீலீலா
சென்னையில் நடைபெற்ற பராசக்தி ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகை ஸ்ரீலீலா பேசியதாகக் கூறப்படும் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன.
சென்னையில் சமீபத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற பராசக்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, கோலிவுட் வட்டாரத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஜாம்பவான் இயக்குனர் மணிரத்னம் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் வருகை தந்து படக்குழுவினரை வாழ்த்தினர்.
சிவகார்த்திகேயன் பராசக்தி படம் குறித்தும், அதே சமயம் ரிலீஸில் மோதவிருக்கும் ஜனநாயகன் படத்துடனான போட்டி குறித்தும் மிகத் தெளிவான விளக்கத்தை அளித்தார். இருப்பினும், இந்த விழாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது நடிகை ஸ்ரீலீலாவின் பேச்சுதான்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஸ்ரீலீலா, தமிழில் பராசக்தி மூலம் தடம் பதிக்கிறார். விழாவில் பேசிய அவர், "பராசக்தி திரைப்படம் வரும் 10-ம் தேதி வெளியாகிறது. அனைவரும் திரையரங்கிற்கு வந்து எனது நடிப்பை பாருங்கள்.
ஒருவேளை இதில் பார்க்க முடியாவிட்டால், பகவந்த் கேசரி படத்தில் எனது நடிப்பை பாருங்கள். நான் எப்போதும் ஒரிஜினல் கதைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பேன்" எனப் பேசியதாக ஒரு தகவல் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
ஸ்ரீலீலாவின் இந்த 'ஒரிஜினல்' கமெண்ட் நேரடியாக தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை தாக்குவதாக விஜய் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர். எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில், அது நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
ரீமேக் படங்களில் நடிப்பதை விட நேரடி கதைகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் என ஸ்ரீலீலா மறைமுகமாக குத்தியது, விஜய் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "முதல் பட மேடையிலேயே இவ்வளவு தைரியமாக ஒரு பெரிய ஸ்டார் படத்தை விமர்சிப்பதா?" என இணையத்தில் விவாதங்கள் அனல் பறக்கின்றன.
ஒருபுறம் படம் ரீமேக் என்பதால் விஜய் ரசிகர்கள் சற்று அப்செட்டில் இருந்தாலும், இயக்குனர் எச். வினோத் மேக்கிங்கில் நிச்சயம் ஏதாவது ஒரு மேஜிக் இருக்கும் என்றும், 'ஜனநாயகன்' மாபெரும் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். பராசக்தி மற்றும் ஜனநாயகன் ஆகிய இரு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் மோதவுள்ள நிலையில், இந்த 'ஒரிஜினல் vs ரீமேக்' போர் இப்போதே தொடங்கிவிட்டது.
