விஜய்க்கு மலேசியாவில் விழுந்த ரெட் கார்டு? ஜனநாயகன் இசை விழாவில் அதிரடி கட்டுப்பாடு!
விஜய் நடிப்பில் உருவான 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ள நிலையில், அங்கு விஜய் அரசியல் பேசுவதற்கு அந்நாட்டு அரசு சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி விஜய் தனது திரையுலகப் பயணத்தின் இறுதிப் பகுதியில் இருக்கும் நிலையில், எச். வினோத் இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கே.வி.என் புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம், வரும் ஜனவரி 9-ம் தேதி பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரத் தயாராகி வருகிறது.
இப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 27-ம் தேதி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக விஜய்யின் ஆடியோ வெளியீட்டு விழா என்றாலே அவரது 'குட்டி ஸ்டோரி' மற்றும் அரசியல் பேச்சுகள் அனல் பறக்கும்.
தற்போது அவர் 'தமிழக வெற்றிக் கழகம்' (TVK) என்ற கட்சியைத் தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ளதால், இந்த மேடையில் அவர் என்ன பேசப்போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ஆனால், இந்த எதிர்பார்ப்பிற்கு மலேசிய அரசாங்கம் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகத் தெரிகிறது.
மலேசிய அரசின் சட்டத்திட்டங்களின்படி, அந்நாட்டின் பொது மேடைகளில் வெளிநாட்டுத் தலைவர்கள் அரசியல் ரீதியான பிரச்சாரங்களையோ அல்லது பரப்புரைகளையோ மேற்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில், 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழாவிற்குச் சில முக்கியமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, விஜய் மேடையில் பேசும்போது சினிமா தொடர்பான கருத்துகளை மட்டுமே பகிர வேண்டும் என்றும், அரசியல் குறித்துப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.
மேலும், விழாவிற்கு வரும் ரசிகர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) சின்னம் பொறித்த டி-ஷர்ட்கள் அணிந்து வரவோ அல்லது கட்சி கொடிகளைக் கொண்டு வரவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறினால் விழா ஏற்பாட்டாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் விஜய் தரப்பு மற்றும் மலேசிய ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருந்தாலும், சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க அமைதியான முறையில் விழாவை நடத்தத் திட்டமிடப்பட்டு வருகிறது.
