மீண்டும் சூப்பர்ஸ்டார் மேஜிக்! கைநழுவிப்போன வாய்ப்பை விடாப்பிடியாகப் பிடித்த இயக்குநர்
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட அதே கதை, இப்போது பல திருப்பங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினியால் ஓகே செய்யப்பட்டுள்ளது.
திரையுலகில் "வாழ்க்கை ஒரு வட்டம்" என்பதை மெய்ப்பிக்கும் விதமாக ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்தவர் இளம் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி. இவர் தனது முதல் படத்திலேயே 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்ததால், அடுத்த படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
சிபி சக்ரவர்த்தி ரஜினியை சந்தித்து ஒரு அட்டகாசமான கதையை விவரித்தார். ஆரம்பத்தில் ரஜினிக்கு அந்த கதை பிடித்திருந்தாலும், சில திரைக்கதை மாற்றங்கள் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் அந்த ப்ராஜெக்ட் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது. இது சிபிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்பட்டது. இருப்பினும் மனம் தளராத சிபி, தனது அடுத்த கட்ட முயற்சிகளில் இறங்கினார்.
இதற்கிடையில், சிபி மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், சிவகார்த்திகேயன் அமரன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் படம் என பிஸியான கால்ஷீட் கொண்டிருந்ததால் அந்தத் திட்டம் தள்ளிப்போனது. மறுபுறம், ரஜினிகாந்த் - சுந்தர்.சி இணையவிருந்த படம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டதால், ரஜினி புதிய இயக்குநர்களைத் தேடினார். இதில் 'ராட்சசன்' புகழ் ராம் குமார் உள்ளிட்ட பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, சிபி சக்ரவர்த்தி ஏற்கனவே ரஜினியிடம் சொன்ன கதையில் கூடுதல் மெருகேற்றங்களைச் செய்து மீண்டும் அணுகியுள்ளார். ரஜினியின் தற்போதைய ரசனைக்கு ஏற்ப அந்த ஸ்கிரிப்ட் பக்காவாக அமைந்ததால், ரஜினி இதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எங்கு விட்டாரோ, அதே இடத்திலிருந்து சிபி சக்ரவர்த்தி இப்போது தனது கனவுப் பயணத்தைத் தொடங்குகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
